ஓதிமா மலர்கள் பாடல் வரிகள் (otima malarkal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவண்ணாமலை தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : நடுநாடு
தலம் : திருவண்ணாமலை
சுவாமி : அருணாசலேசுவரர்
அம்பாள் : உண்ணாமுலையம்மை

ஓதிமா மலர்கள்

ஓதிமா மலர்கள் தூவி
உமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கும் எண்டோ ள்
சுடர்மழுப் படையி னானே
ஆதியே அமரர் கோவே
அணியணா மலையு ளானே
நீதியால் நின்னை யல்லால்
நினையுமா நினைவி லேனே. 1

பண்டனை வென்ற இன்சொற்
பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக்
கடவுளே கமல பாதா
அண்டனே அமரர் கோவே
அணியணா மலையு ளானே
தொண்டனேன் உன்னை அல்லாற்
சொல்லுமா சொல்லி லேனே. 2

உருவமும் உயிரு மாகி
ஓதிய உலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
மலையுளாய் அண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான்
மற்றொரு மாடி லேனே. 3

பைம்பொனே பவளக் குன்றே
பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா
சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும்
அணியணா மலையு ளானே
என்பொனே உன்னை யல்லால்
ஏதும்நான் நினைவி லேனே. 4

பிறையணி முடியி னானே
பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா இறைவா வண்டார்
கொன்றையாய் வாம தேவா
அறைகழல் அமர ரேத்தும்
அணியணா மலையு ளானே
இறைவனே உன்னை யல்லா
லியாதுநான் நினைவி லேனே. 5

புரிசடை முடியின் மேலோர்
பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக்
கருதிய கால காலா
அரிகுலம் மலிந்த அண்ணா
மலையுளாய் அலரின் மிக்க
வரிமிகு வண்டு பண்செய்
பாதநான் மறப்பி லேனே. 6

இரவியும் மதியும் விண்ணும்
இருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவனம் எட்டுந்
திசையொளி உருவ மானாய்
அரவுமிழ் மணிகொள் சோதி
அணியணா மலையு ளானே
பரவுநின் பாத மல்லாற்
பரமநான் பற்றி லேனே. 7

பார்த்தனுக் கன்று நல்கிப்
பாசுப தத்தை ஈந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை
நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்டல்
அணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத்
திறமலாற் றிறமி லேனே. 8

பாலுநெய் முதலா மிக்க
பசுவில்ஐந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக்
காண்கிலா வகையுள் நின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூகம்
அணியணா மலையு ளானே
வாலுடை விடையாய் உன்றன்
மலரடி மறப்பி லேனே. 9

இரக்கமொன் றியாது மில்லாக்
காலனைக் கடிந்த எம்மான்
உரத்தினால் வரையை ஊக்க
ஒருவிரல் நுதியி னாலே
அரக்கனை நெரித்த அண்ணா
மலையுளாய் அமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித்
திருவடி மறப்பி லேனே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment