Othi Ma Malargal thoovi umaiyaval panga | Thiruvannamalai Pathigam – Thirumurai 4 இந்த பதிவில் நீங்கள் படித்து பயன் பெறுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது… மேலும் ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா – நான்காம் திருமுறை காணொளி விரைவில் இந்த பதிவில் நீங்கள் பார்ப்பதற்காக பதிவிடுவோம்…
============
நான்காம் திருமுறை : திருநாவுக்கரசர் தேவாரம்
============
சிவராத்திரி முதல் கால நேரத்தில் ஓத வேண்டிய பதிகம்
============
திருமுறை 4 : பாடல் 1
ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா மிக்க
ஓதிமா மலர்கள் தூவி யுமையவள் பங்கா மிக்க
சோதியே துளங்கு மெண்டோட் சுடர்மழுப் படையி னானே
ஆதியே யமரர் கோவே யணியணா மலையு ளானே
நீதியா னின்னை யல்லா னினையுமா நினைவி லேனே.
விளக்கம்:
ஓதி என்று வாயினால் தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைத் தொழுததையும், மலர்கள் தூவி என்று கையினால் மலர்கள் எடுத்து இறைவன் மேல் தூவி வழிபட்டதையும். நினையுமா நினைவு என்று இறைவனை எப்போதும் நினைத்து இருக்கும் தன்மையையும் இங்கே அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். இவ்வாறு மனம், மொழி, மெய்களால் அப்பர் பிரான், அன்புடன் இறைவனை வழிபட்டமை இந்த பாடல் மூலம் நமக்கு உணர்த்தப் படுகின்றது, நாமும் அவ்வாறு இறைவனைத் தொழவேண்டும் என்பதே இந்த பாடலின் மையக் கருத்தாகும்.
ஈசன் தனது உடலில் தன்னை ஏற்கவேண்டி உமையம்மை தவம் செய்து, ஒரு கார்த்திகை நன்னாளில் இறைவனின் உடலின் இடது பாகத்தில் அமர்ந்தது இந்த தலத்தில் தான். இன்றும் கார்த்திகை நன்னாளில் இறைவனும் இறைவியும் இணைந்த மாதொரு பாகன் கோலத்தில் இறைவன் காட்சி தருவது ஒரு சிறப்பான நிகழ்ச்சியாகும். இறைவன் இவ்வாறு காட்சி அளித்த பின்னர் தான் மலையின் உச்சியில் அண்ணாமலைத் தீபம் ஏற்றப்படும். இந்த நிகழ்ச்சியை உணர்த்தும் விதமாக உமையவள் பங்கா என்று இறைவனை முதல் பாடலிலே அப்பர் பிரான் அழைக்கின்றார்.
கிரிவலம் செல்லும்போது, நாம் மேற்குச் சுற்றில் ஆதி அண்ணாமலை என்று சொல்லப்படும் கோயிலையும் காணலாம். இந்த கோயிலை அடி அண்ணாமலை என்றும் அணி அண்ணாமலை என்றும் அழைப்பதுண்டு. இந்த கோயிலுக்கு அருகே மணிவாசகர் தங்கி இருந்தார் என்றும் அப்போது தான் திருவெம்பாவை அருளியதாகவும் கருதப் படுகின்றது. இங்கே மணிவாசகப் பெருமானுக்கு தனியாக ஒரு கோயில் உள்ளது. இந்த கோயில் பிரமன் வழிபட்ட தலமாகும். அணி அண்ணாமலை என்று அப்பர் பிரான் இந்த கோயிலின் மீது தான் இந்த பதிகத்தினை அருளினார் என்றும் சிலர் கருதுவார்கள். அணி அணாமலை என்பதற்கு, தொண்டர்கள் அணுகி வழிபடும் இறைவன் என்றும், அடியார் அல்லாதார் அணுகமுடியாத இறைவன் என்றும் விளக்கம் அளிப்பதுண்டு. இந்த தல வரலாறே, பிரமனும் திருமாலும் சோதியின் அடிமுடி காணமுடியாமல் திகைத்து நின்ற நிகழ்ச்சி தானே.
மாமலர்கள்=சிவபெருமானை வழிபடுவதற்கு சிறந்த மலர்களாக கருதப் படுபவை, புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை. பாதிரி, அலரி, மற்றும் செந்தாமரை ஆகிய எட்டு மலர்கள் ஆகும். கொல்லாமை, இரக்கம், ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு மற்றும் அறிவு ஆகிய எட்டு குணங்களைக் கொண்டவராக இருந்து (அக மலர்கள்) இறைவனை வழிபடுதல் சிறந்த வழிபாடாக கருதப்படுகின்றது.
பொழிப்புரை:
பார்வதி தேவியை உடலில் ஏற்றவனே என்றும், மேன்மையான சோதியே என்றும், கூத்தாடும் போது அசைந்தாடும் எட்டு தோள்களை உடையவனே என்றும், ஒளி வீசும் மழுப் படையினை உடையவனே என்றும், அனைவர்க்கும் முன்னவனான ஆதியே என்றும், அமரர்கள் தலைவனே என்றும், அழகிய அண்ணாமலையில் உறைபவனே என்றும் உன்னை எப்போதும் நினைத்து மலர்கள் தூவி முறையாக வழிபட்டு உன்னை தியானிப்பதைத் தவிர வேறு எவரையும், எந்தப் பொருளையும் நான் நினைக்க மாட்டேன்.
============
திருமுறை 4 : பாடல் 2
பண்டனை வென்ற வின்சொற் பாவையோர் பங்க நீல
கண்டனே கார்கொள் கொன்றைக் கடவுளே கமல பாதா
அண்டனே யமரர் கோவே யணியணா மலை யுளானே
தொண்டனே னுன்னை யல்லாற் சொல்லுமா சொல்லி லேனே.
விளக்கம்:
முந்தைய பாடலில் சிவபெருமானைத் தவிர வேறு ஏதும் நினைப்பு இல்லை என்று கூறும் அப்பர் பிரான், இந்த பாடலில் சிவபெருமானைத் தவிர வேறு எவரையும் புகழ்ந்து சொல்ல மாட்டேன் என்று கூறுகின்றார். கொன்றைக் கடவுள்=கொன்றை மலரை தனது சிறப்பான அடையாளமாகக் கொண்டுள்ள சிவபெருமான்:
பண் தனை வென்ற இன்சொல் பாவை என்று அப்பர் பிரான் கூறுவது நமக்கு அவர் திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பண்ணின் நேர் மொழியாள் என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடலை நினைவூட்டுகின்றது. பார்வதி தேவியின் சொற்கள் மிகவும் இனிமையானது என்பதை குறிக்க, பண், யாழ், வீணை, தேன், பால், கிளி, குயில், மழலை மொழி போன்றவை பல தேவாரப் பாடல்களில் உவமையாக கூறப்பட்டுள்ளன. திருமறைக்காடு தலத்தின் மீது அருளிய பதிகத்தின் (2.91) மூன்றாவது பாடலில் சம்பந்தர், யாழில் எழும் பண்ணினும் இனிய மொழிகளைப் பேசும் உமையம்மை என்று குறிப்பிடுகின்றார். இனிமையாக இருந்த மொழி அடக்கமாகவும் இருந்தன என்பதை குறிப்பிடும் வண்ணம் பணிமொழி என்று கூறுவது நயமாக உள்ளது. சிவபெருமானின் மார்பில் கிடக்கும் பூணூல் மெல்லியதாகவும் வெண்மையாகவும் இருந்தது என்று கூறி, பூணூல் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் சம்பந்தர் நமக்கு இங்கே உணர்த்துகின்றார்.
பொழிப்புரை:
இனிமையில் பண்ணினையும் வென்ற சொற்களை உடைய பார்வதி தேவியை உடலின் ஒரு பாகத்தில் கொண்டுள்ள இறைவனே, நீலகண்டனே, மழைக் காலத்தில் வளரும் கொன்றை மாலையைச் சூடியவனே, தாமரை மலர் போன்று மென்மையான திருவடிகளை உடையவனே, எல்லா உலகமாகவும் இருப்பவனே, தேவர்களின் தலைவனே, அழகிய அண்ணாமலையில் உறைபவனே, உனது தொண்டனாகிய நான் உன்னைத் தவிர வேறு எவரையும் புகழ்ந்து சொல்லும் சொற்களை சொல்லமாட்டேன்.
============
திருமுறை 4 : பாடல் 3
உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே.
விளக்கம்:
இந்த பாடலில் உலகுக்கு உருவமாகவும் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உயிராகவும் உள்ள தன்மை கூறப்பட்டுள்ளது. இதே நிலை அப்பர் பெருமானின் நின்ற திருத்தாண்டகத்திலும், வடமொழி வேதத்தில் காணப்படும் ஸ்ரீ ருத்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. மாடு=செல்வம்: ஓதிய=சொல்லப்பட்ட
உயிருள்ள ஆன்மாக்கள், உயிரற்ற சடப் பொருட்கள் ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை: அதே போல் பிறப்பு, பிறப்பில்லாத தன்மையாகிய வீடுபேறு ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. இவ்வாறு இருவேறு மாறுபட்ட பொருட்களாக இருப்பது இறைவன் சிவபிரான் ஒருவனால் தான் முடிந்த காரியம். இவ்வாறு எதிர்மறைப் பொருட்களாகவும் இறைவன் இருக்கும் நிலை மணிவாசகப் பெருமானால் பொற்சுண்ணம் பதிகத்தின் கடைப் பாடலில் விவரமாக கூறப்படுகின்றது.
பொழிப்புரை:
உயிருள்ள ஆன்மாக்கள் மற்றும் உயிரற்ற சடப் பொருட்களை கொண்டுள்ள உலகமாகவும், அந்த உலகில் வாழும் உயிர்களுக்கெல்லாம் மூல கன்ம வினையாகவும், வினையின் காரணமாக உயிர்கள் எடுக்கும் பிறப்பாகவும், அந்த பிறப்பிலிருந்து கிடைக்கும் விடுதலையாகிய வீடுபேறாகவும் நிற்கும் பெருமானே, பொன்னினையும் நீருடன் கலந்து சொரியும் அருவிகள் காணப்படும் அண்ணாமலையில் உறையும் இறைவனே, தேவர்கள் தலைவனே, உனது திருவடிகளில் பொருந்துவது தவிர வேறு செல்வம் ஏதும் இல்லாதவனாக நான் உள்ளேன். உனது திருவடியினும் உயர்ந்த செல்வமாக நான் எதனையும் கருத மாட்டேன்.
============
திருமுறை 4 : பாடல் 4
பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீறா
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழு மணியணா மலையு ளானே
என்பொனே யுன்னை யல்லா லேதுநா னினைவி லேனே.
விளக்கம்:
அம்பொன்=அழகிய பொன்: கொழித்து=மிகவும் அதிகமாக: பரமன்=அனைவரிலும் மேம்பட்டவன்.
பொழிப்புரை:
பசும்பொன் போன்றவனே, செம்மை நிறத்துடன் பவள மலையாக காட்சி அளிப்பவனே, அனைவர்க்கும் மேம்பட்டவனே, பால் போன்ற வெண்ணீற்றினை உடலில் பூசியவனே, செம்பொன்னே, மலர் போன்ற திருவடிகளை உடையவனே, சிறப்பு மிக்க மாணிக்கக் கற்களும் அழகிய பொன்னும் திரட்டிக் கொண்டு வந்து வீழும் அருவிகள் உடைய அழகிய அண்ணாமலையில் உறைபவனே, எனக்கு பொன் போன்று அருமையான பொருளாக உள்ளவனே, அடியேன் உன்னைத் தவிர வேறு எந்த பொருளையும் நினையாமல் இருக்கின்றேன்.
============
திருமுறை 4 : பாடல் 5
பிறையணி முடியி னானே பிஞ்ஞகா பெண்ணோர் பாகா
மறைவலா விறைவா வண்டார் கொன்றையாய் வாம தேவா
அறைகழ லமர ரேத்து மணியணா மலையு ளானே
இறைவனே யுன்னை யல்லால் யாதுநா னினைவி லேனே.
விளக்கம்:
பிஞ்ஞகன்=தலைக்கோலம் அணிந்தவன்: வாமதேவம் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்று. நேபாள நாட்டின் தலைநகரான காட்மாண்டுவில் உள்ள பசுபதிநாதர் கோயிலின் மூலவர் ஐந்து முகங்களைக் கொண்டவராக விளங்குகின்றார். ஐந்து முகங்களாவன, ஈசானம் (கிழக்கு நோக்கியது: ஸ்படிக நிறம்), தத்புருடம் (உச்சியில் உள்ளது: பொன்னிறம்), அகோரம் (தெற்கு நோக்கியது: நீலநிறம்), வாமதேவம் (வடக்கு நோக்கியது: செம்மை நிறம்), சத்யோஜாதம் (மேற்கு நோக்கியது: வெண்மை நிறம்).
பொழிப்புரை:
சடையில் பிறையினைச் சூடிய கடவுளே, அழகிய தலைக்கோலம் கொண்டவனே, பார்வதி தேவியை ஒரு பாகத்தில் கொண்டவனே, வேதங்களில் வல்லவனே, அனைவர்க்கும் தலைவனே, வண்டுகள் சூழ்ந்த நறுமணம் மிக்க கொன்றை மலரை அணிந்தவனே, வாமதேவனே, ஒலிக்கும் கழல்களை காலில் அணிந்தவனே, தேவர்களால் போற்றப் படுபவனே, அழகிய அண்ணாமலையில் உறைபவனே, உன்னைத் தவிர யான் வேறு எவரையும், வேறு எந்த பொருளையும் நினைக்க மாட்டேன்.
============
திருமுறை 4 : பாடல் 6
புரிசடை முடியின் மேலோர் பொருபுனற் கங்கை வைத்துக்
கரியுரி போர்வை யாகக் கருதிய கால காலா
அரிகுல மலிந்தவண்ணா மலையுளா யலரின்மிக்க
வரிமிகு வண்டுபண்செய் பாதநான் மறப்பிலேனே.
விளக்கம்:
அரிகுலம்=சிங்கங்கள் முதலான விலங்குகள்: புரிசடை=முறுக்கி பின்னப்பட்ட சடை: யானையின் பசுந்தோல் பிறரது உடலில் பட்டால் அவர்களைக் கொல்லும் தன்மை உடையது என்று நச்சினார்க்கினியர் சிந்தாமணி உரையில் கூறுகின்றார். ஆனால் சிவபெருமானோ. நஞ்சு உண்ட பின்னரும் இறவாமல் இருந்தது போன்று, யானையின் பசுந்தோலைப் போர்த்துக் கொண்ட பின்னரும் இறவாமல் இருந்ததால், காலனுக்கும் காலன் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். அலர்=மலர்: வரி=கோடு. வண்டுகள் பண் பாடும் திருவடித் தாமரைகள் என்று கூறும் அப்பர் பிரான், ஐந்தறிவு பெற்ற வண்டுகள் போற்றி இசைத்துப் பாடும் சிவபிரானை ஆறறிவு பெற்ற நாம் வாழ்த்தாமல் இருக்கலாமா என்று நமக்கு உணர்த்துகின்றார் போலும்.
பொழிப்புரை:
முறுக்கி பின்னப்பட்ட சடையில், அலைகள் மோதும் நீரினை உடைய கங்கை நதியை அடக்கியவனே, தன்னைத் தாக்க வந்த யானையின் தோலை உரித்து அந்த தோலைப் போர்வையாக உரித்து உடலில் போர்த்துக் கொண்டவனே, காலனுக்கும் காலனாக விளங்கியவனே, சிங்கம் முதலான விலங்குகள் அதிகமாக காணப்படும் அண்ணாமலையில் உறைபவனே, தேனுண்ண வந்த வண்டுகள் பண்பாடும் நறுமணம் கொண்ட புதிய மலர்கள் அழகு செய்யும் பாதங்களை உடையவனே, உனது மலரினும் மெல்லிய திருவடிகளை அடியேன் மறக்க மாட்டேன்.
============
திருமுறை 4 : பாடல் 7
இரவியு மதியும் விண்ணு மிருநிலம் புனலுங் காற்றும்
உரகமார் பவன மெட்டுந் திசையொளி யுருவ மானாய்
அரவுமிழ் மணிகொள்சோதி யணியணா மலையுளானே
பரவுநின் பாதமல்லாற் பரமநான் பற்றிலேனே.
விளக்கம்:
பாம்புகள் தங்களது கழுத்தில் மாணிக்கக் கற்களை வைத்துள்ளன என்றும், இரவில் இரை தேடும்போது மணியினை உமிழ்ந்து அந்த மணியின் ஒளியில் இரை தேடும் என்றும் தனது தேடல் முடிந்தவுடன் அந்த மணியினை விழுங்கிவிடும் என்று கூறுவார்கள். அத்தகைய பாம்புகள் அதிகமாக காணப்படும் மலை அண்ணாமலை என்று அப்பர் பிரான் கூறுகின்றார். திருக்கோயிலில் மூலவர் சன்னதியில் உள்ள நாகாபரணத்தில் ஒளி வீசும் மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்டு இருப்பதை நாம் காணலாம். உரகம்=கால்கள் இன்றி மார்பினால் நகரும் பாம்பு: இங்கே அட்ட நாகங்களை குறிக்கின்றது.
பொழிப்புரை:
சூரியன், சந்திரன், ஆகாயம், பூமி, நீர், காற்று, பாதாளத்தில் உறையும் அட்ட நாகங்கள் வைத்துள்ள மணிகள், ஆகிய அனைத்திலும் ஒளி உருவமாக உறையும் இறைவனே, பாம்புகள் இரவில் இரை தேடும் சமயத்தில் வெளிச்சத்திற்காக உமிழும் மணிகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளி வீசும் அண்ணாமலையில் உறையும் இறைவனே, உனது திருவடிகளைப் போற்றி வாழ்த்துவது அன்றி அடியேன் வேறு எவரையும் பற்றுக்கோடாக கொள்ள மாட்டேன்.
============
திருமுறை 4 : பாடல் 8
பார்த்தனுக் கன்று நல்கிப் பாசுப தத்தை யீந்தாய்
நீர்த்ததும் புலாவு கங்கை நெடுமுடி நிலாவ வைத்தாய்
ஆர்த்துவந் தீண்டு கொண்ட லணியணா மலையு ளானே
தீர்த்தனே நின்றன் பாதத் திறமலாற் றிறமி லேனே.
விளக்கம்:
நல்குதல்=அருளுதல்: நிலாவுதல்=தங்குதல்: தீர்த்தன் என்று இந்த பாடலில் அப்பர் பிரான் சிவபிரானை குறிக்கின்றார். புனித தீர்த்தம் அதில் நீராடும் மக்களின் பாவங்களைத் தீர்ப்பது போன்று, தன்னை வணங்கி வழிபடும் அடியார்களின் வினைகளைக் கழிப்பவன் சிவபெருமான் என்பதை உணர்த்தும் பொருட்டு, சிவபெருமானை தீர்த்தன் என்று அழைக்கின்றார். அடியார்களின் மலங்களைக் களைந்து அவர்களை தூய்மை செய்யும் தன்மை கொண்ட சிவபிரான் தீர்த்தன் என்று அழைக்கப் படுவது பொருத்தம் தானே. இதே கருத்தை உள்ளடக்கி மணிவாசகர் திருவெம்பாவையின் ஒரு பாடலில், நம்மைப் பிணித்துள்ள பிறவித் துன்பம் ஒழியும்படி நாம் மகிழ்ந்து ஆடுகின்ற தீர்த்தமாய் உள்ளவன் சிவபெருமான் என்று கூறுகின்றார். தாங்கள் எந்த நிலையில் இருந்தாலும், எந்த செயலைச் செய்தாலும் இறைவனைப் பற்றிய நினைவுகள் நீங்காமல் இருப்பவர்கள் அடியார்கள். நீராடும் போதும் இறைவனது புகழைக் குறிக்கும் வார்த்தைகளை பேசிக் கொண்டும், அவனது திருவடிக் கமலங்களை துதித்துக் கொண்டும் இருக்க வேண்டும் என்றும் இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
பொழிப்புரை:
பார்த்தனுக்கு அன்று பாசுபத ஆயுதத்தை அளித்து அருள் புரிந்தவனே, மிகுந்த நீரினைக் கொண்டு ததும்பும் கங்கை நதியை நீண்ட சடையில் தங்குமாறு வைத்தவனே, ஆரவாரத்துடன் ஒன்று சேரும் மேகங்கள் அழகு செய்யும் அண்ணாமலையை இருப்பிடமாகக் கொண்டவனே, தூய்மை செய்பவனே, உனது திருவடிகளுக்கு அடிமையாக இருப்பதைத் தவிர வேறு எவருடனும் தொடர்பு கொள்ளமாட்டேன்.
============
திருமுறை 4 : பாடல் 9
பாலுநெய் முதலா மிக்க பசுவிலைந் தாடு வானே
மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையு ணின்றாய்
ஆலுநீர் கொண்டல் பூக மணியணா மலையு ளானே
வாலுடை விடையா யுன்றன் மலரடி மறப்பி லேனே.
விளக்கம்:
வால்=வெண்மை நிறம். ஆளும் நீர்=முழங்கும் நீர்: கொண்டல்=மேகம்: பூகம்=திரட்சி, திரண்டு காணப்படும் தன்மை: பூகம் என்பதற்கு கமுகு என்ற பொருளும் உண்டு. ஆனால் இங்கே மேகக் கூட்டங்கள் என்ற பொருளே பொருத்தமாக உள்ளது.
பொழிப்புரை:
பால், நெய் மற்றும் தயிர், கோசலம், கோமியம் ஆகிய பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை விரும்பி நீராடுபவனே, திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து உன்னைக் காணவேண்டும் என்று முயன்றபோது, அவர்கள் இருவரும் காண இயலாத வகையில் சோதிப் பிழம்பாக நின்றவனே, முழங்கும் நீர் அருவிகளையும் மேகக் கூட்டங்களையும் அணிகலனாகக் கொண்ட அண்ணாமலையை உடையவனே, வெண்மை நிறத்தைக் கொண்ட இடபத்தை வாகனமாக உடையவனே, உனது மலர் போன்ற திருப்பாதங்களை நான் மறக்கமாட்டேன்.
============
திருமுறை 4 : பாடல் 10
இரக்கமொன் றியாது மில்லாக் காலனைக் கடிந்த வெம்மான்
உரத்தினால் வரையை யூக்க வொருவிர னுதியி னாலே
அரக்கனை நெரித்த வண்ணா மலையுளா யமர ரேறே
சிரத்தினால் வணங்கி யேத்தித் திருவடி மறப்பி லேனே.
விளக்கம்:
முதல் பாடலில் சிவபெருமானைத் தவிர வேறு ஏதும் நினைவுகள் இல்லை என்று கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில் திருவடிகளை என்றும் மறவாமல் இருப்பேன் என்று கூறி பதிகத்தினை முடிக்கின்றார். தலையால் வணங்குவேன் என்று (உடல்), ஏத்தி வாழ்த்துவேன் என்று (வாய்) மறக்க மாட்டேன் என்று மனத்தினையும் (மனம்) இறை வழிபாட்டில் ஈடுபடுத்துவதை நாம் உணரலாம். முதல் பாடலிலும் இவ்வாறே மனம், மொழி, மெய்களை ஈடுபடுத்துவது நினைவு கூரத் தக்கது.
பொழிப்புரை:
இரக்கம் என்பதை அறியாத கூற்றுவனைத் தண்டித்த சிவபெருமானே, தனது வலிமையால் கயிலை மலையை பெயர்த்து எடுக்க முயற்சி செய்த இராவணனை, ஒரு விரல் நுனியினால் நெரித்து அடக்கிய அண்ணாமலைத் தலைவனே, தேவர்களின் தலைவனே, உன்னை அடியேன் சிரம் தாழ்த்தி வணங்கி, வாயால் துதித்து மனத்தால் உனது திருவடிகளை என்றும் மறவாமல் இருப்பேன்.
முடிவுரை:
ஞானசம்பந்தப் பெருமான் பாடல்களில் காணப்படுவது போன்று இயற்கை காட்சிகள் குறித்த வர்ணனையை அதிகமாக அப்பர் பிரானின் பாடல்களில் காணமுடியாது இருவரும் ஒன்றாகவே பல தலங்கள் சென்றிருந்தாலும், தான் ரசித்த காட்சிகளை பாடலில் சம்பந்தப் பெருமான் வடிவமைத்தது போன்று அப்பர் பிரான் செய்யவில்லை. இதற்கு நகைச்சுவையாக கி.வா.ஜா அவர்கள், ஒரு விளக்கம் அளிக்கின்றார். குடும்பத்துடன் நாம் பயணம் மேற்கொள்ளும்போது, நமது குழந்தைகள் இரயில் பெட்டியின் ஜன்னல் அருகே உட்காருவதும், ஜன்னல் வழியாக பல காட்சிகளை ரசித்தபடியே பயணம் செய்வதையும் நாம் அறிவோம். அதே சமயத்தில் குடும்பத்தில் உள்ள பெரியோர்கள், அந்த காட்சிகளை ரசிக்காமல் ஏதேனும் புத்தகமோ அல்லது செய்தித் தாளிலோ ஆழ்ந்திருப்பதையும் நாம் காண்கின்றோம். தேவாரத் தலப் பயணங்கள் மேற்கொண்ட குழந்தையான சம்பந்தர் இயற்கை காட்சிகளை ரசித்திருப்பார் போலும்: அதே சமயத்தில் அவருடன் பயணம் செய்த பெரியவர் அப்பர் பிரான், சிவனது அருளினையும், அவனது பல தன்மைகளையும் மனதில் அசை போட்டபடியே பயணம் செய்தார் போலும். எனவே அவரவரது அனுபவங்கள் அவர்கள் பாடல்களில் பிரதிபலிக்கின்றது என்று சுவைபட கூறியது நினைவுக்கு வருகின்றது.
ஆனால் இந்த பதிகத்தின் பாடல்களில் அப்பர் பிரானும் அண்ணாமலையின் காட்சிகளை நமது கண் முன்னே கொண்டு வருகின்றார். பூவார் மலர் கொண்டு என்று தொடங்கும் பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் சம்பந்தர் அண்ணாமலையின் இயற்கை காட்சிகளை நமக்கு படம் பிடித்து காட்டுகின்றார். இரவில் பாம்புகள் படம் எடுத்து ஆடும் அண்ணாமலை என்று அவர் கூறுவது (1.69.11) நமக்கு இரவில் நாகங்கள் உமிழ்ந்த மணிகளால் ஒளிதிகழும் அண்ணாமலை என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தின் ஏழாவது பாடலில் கூறுவதை நினைவூட்டுகின்றது. அல்=இரவு: அல்லாடு அரவம்=இரவில் படம் விரித்து ஆடும் பாம்பு:
இந்த ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா – திருவண்ணாமலை பதிகம் | othi ma malargal thoovi umaiyaval panga thiruvannamalai pathigam thirumurai4 பதிவில் ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால், கீழே உள்ள கமெண்ட் செக்ஷனில் பதிவிடவும்… மேலும் இந்த பாடலை இந்த தளத்தில் மீண்டும் படிக்க விரும்பினால் bookmark செய்து கொள்ளலாம் அல்லது பாடல் வரிகள், Shiva Songs, Shiva MP3 songs lyrics, சிவன் பாடல்கள், சிவராத்திரி பாடல்கள், Sivarathri Songs ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா – திருவண்ணாமலை பதிகம் ஓதி மாமலர்கள் தூவி உமையவள் பங்கா – நான்காம் திருமுறை போன்ற வார்த்தைகளை உபயோகித்து தேடலாம்…