ஒருவ ராயிரு மூவரு பாடல் வரிகள் (oruva rayiru muvaru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கடம்பூர் – மேல்கடம்பூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு வடகரை
தலம் : கடம்பூர் – மேல்கடம்பூர்
சுவாமி : அமிர்தகடேஸ்வரர்
அம்பாள் : சோதி மின்னம்மை
ஒருவ ராயிரு மூவரு
ஒருவ ராயிரு
மூவரு மாயவன்
குருவ தாய
குழகன் உறைவிடம்
பருவ ரால்குதி
கொள்ளும் பழனஞ்சூழ்
கருவ தாங்கடம்
பூர்க்கரக் கோயிலே. 1
வன்னி மத்தம்
வளரிளந் திங்களோர்
கன்னி யாளைக்
கதிர்முடி வைத்தவன்
பொன்னின் மல்கு
புணர்முலை யாளொடும்
மன்னி னான்கடம்
பூர்க்கரக் கோயிலே. 2
இல்லக் கோலமும்
இந்த இளமையும்
அல்லற் கோலம்
அறுத்துய வல்லிரே
ஒல்லைச் சென்றடை
யுங்கடம் பூர்நகர்ச்
செல்வக் கோயில்
திருக்கரக் கோயிலே. 3
வேறு சிந்தை
யிலாதவர் தீவினை
கூறு செய்த
குழகன் உறைவிடம்
ஏறு செல்வத்
திமையவர் தாந்தொழும்
ஆறு சேர்கடம்
பூர்க்கரக் கோயிலே. 4
திங்கள் தங்கிய
செஞ்சடை மேலுமோர்
மங்கை தங்கும்
மணாளன் இருப்பிடம்
பொங்கு சேர்மணற்
புன்னையும் ஞாழலுந்
தெங்கு சேர்கடம்
பூர்க்கரக் கோயிலே. 5
மல்லை ஞாலத்து
வாழும் உயிர்க்கெலாம்
எல்லை யான
பிரானார் இருப்பிடங்
கொல்லை முல்லை
கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம்
பூர்க்கரக் கோயிலே. 6
தளரும் வாளர
வத்தொடு தண்மதி
வளரும் பொற்சடை
யாற்கிட மாவது
கிளரும் பேரொலி
கின்னரம் பாட்டறாக்
களரி யார்கடம்
பூர்க்கரக் கோயிலே. 7
உற்றா ராயுற
வாகி உயிர்க்கெலாம்
பெற்றா ராய
பிரானார் உறைவிடம்
முற்றார் மும்மதி
லெய்த முதல்வனார்
கற்றார் சேர்கடம்
பூர்க்கரக் கோயிலே. 8
வெள்ளை நீறணி
மேனிய வர்க்கெலாம்
உள்ள மாய
பிரானார் உறைவிடம்
பிள்ளை வெண்பிறை
சூடிய சென்னியான்
கள்வன் சேர்கடம்
பூர்க்கரக் கோயிலே. 9
பரப்பு நீரிலங்
கைக்கிறை வன்னவன்
உரத்தி னாலடுக்
கல்லெடுக் கல்லுற
இரக்க மின்றி
இறைவிர லாற்றலை
அரக்கி னான்கடம்
பூர்க்கரக் கோயிலே.
திருச்சிற்றம்பலம்