ஓங்கிமேல் உழிதரும் பாடல் வரிகள் (onkimel ulitarum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் வேள்விக்குடி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : வேள்விக்குடி
சுவாமி : உத்தரவேதீஸ்வரர்
அம்பாள் : மிருதுமுகிழாம்பிகை

ஓங்கிமேல் உழிதரும்

ஓங்கிமேல் உழிதரும் ஒலிபுனற்
கங்கையை ஒருசடைமேற்
தாங்கினார் இடுபலி
தலைகலனாக்கொண்ட தம்மடிகள்
பாங்கினால் உமையொடும் பகலிடம்
புகலிடம் பைம்பொழில்சூழ்
வீங்குநீர்த் துருத்தியார் இரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 1

தூறுசேர் சுடலையிற் சுடரெரி
யாடுவர் துளங்கொளிசேர்
நீறுசாந் தெனவுகந் தணிவர்வெண்
பிறைமல்கு சடைமுடியார்
நாறுசாந் திளமுலை யரிவையோ
டொருபகல் அமர்ந்தபிரான்
வீறுசேர் துருத்தியார் இரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 2

மழைவளர் இளமதி மலரொடு
தலைபுல்கு வார்சடைமேற்
கழைவளர் புனல்புகக் கண்டவெங்
கண்ணுதற் கபாலியார்தாம்
இழைவளர் துகிலல்குல் அரிவையோ
டொருபகல் அமர்ந்தபிரான்
விழைவளர் துருத்தியார் இரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 3

கரும்பன வரிசிலைப் பெருந்தகைக்
காமனைக் கவினழித்த
சுரும்பொடு தேன்மல்கு தூமலர்க்
கொன்றையஞ் சுடர்ச்சடையார்
அரும்பன வனமுலை அரிவையோ
டொருபகல் அமர்ந்தபிரான்
விரும்பிடந் துருத்தியார் இரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 4

வளங்கிளர் மதியமும் பொன்மலர்க்
கொன்றையும் வாளரவுங்
களங்கொளச் சடையிடை வைத்தஎங்
கண்ணுதற் கபாலியார்தாந்
துளங்குநூல் மார்பினர் அரிவையோ
டொருபகல் அமர்ந்தபிரான்
விளங்குநீர்த் துருத்தியார் இரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 5

பொறியுலாம் அடுபுலி யுரிவையர்
வரியராப் பூண்டிலங்கும்
நெறியுலாம் பலிகொளும் நீர்மையர்
சீர்மையை நினைப்பரியார்
மறியுலாங் கையினர் மங்கையோ
டொருபகல் அமர்ந்தபிரான்
வெறியுலாந் துருத்தியார் இரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 6

புரிதரு சடையினர் புலியுரி
யரையினர் பொடியணிந்து
திரிதரும் இயல்பினர் திரிபுர
மூன்றையுந் தீவளைத்தார்
வரிதரு வனமுலை மங்கையோ
டொருபகல் அமர்ந்தபிரான்
விரிதரு துருத்தியார் இரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 7

நீண்டிலங் கவிரொளி நெடுமுடி
யரக்கன்இந் நீள்வரையைக்
கீண்டிடந் திடுவனென் றெழுந்தவ
னாள்வினைக் கீழ்ப்படுத்தார்
பூண்டநூல் மார்பினர் அரிவையோ
டொருபகல் அமர்ந்தபிரான்
வேண்டிடந் துருத்தியார் இரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 8

கரைகடல் அரவணைக் கடவுளுந்
தாமரை நான்முகனுங்
குரைகழ லடிதொழக் கூரெரி
யெனநிறங் கொண்டபிரான்
வரைகெழு மகளொடும் பகலிடம்
புகலிடம் வண்பொழில்சூழ்
விரைகமழ் துருத்தியார் இரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 9

அயமுக வெயினிலை அமணருங்
குண்டருஞ் சாக்கியரும்
நயமுக வுரையினர் நகுவன
சரிதைகள் செய்துழல்வார்
கயலன வரிநெடுங் கண்ணியோ
டொருபகல் அமர்ந்தபிரான்
வியனகர்த் துருத்தியார் இரவிடத்
துறைவர்வேள் விக்குடியே. 10

விண்ணுலாம் விரிபொழில் விரைமணல்
துருத்திவேள் விக்குடியும்
ஒண்ணுலாம் ஒலிகழல் ஆடுவார்
அரிவையோ டுறைபதியை
நண்ணுலாம் புகலியுள் அருமறை
ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணுலாம் அருந்தமிழ் பாடுவார்
ஆடுவார் பழியிலரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment