ஒள்ளி துள்ளக் கதிக்கா பாடல் வரிகள் (olli tullak katikka) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவேற்காடு தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : தொண்டைநாடு
தலம் : திருவேற்காடு
சுவாமி : வேதபுரீஸ்வரர்
அம்பாள் : பாலாம்பிகை

ஒள்ளி துள்ளக் கதிக்கா

ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி
வெள்ளி யானுறை வேற்காடு
உள்ளி யாருயர்ந் தாரிவ் வுலகினில்
தெள்ளி யாரவர் தேவரே. 1

ஆடல் நாகம் அசைத்தள வில்லதோர்
வேடங் கொண்டவன் வேற்காடு
பாடி யும்பணிந் தாரிவ் வுலகினில்
சேட ராகிய செல்வரே. 2

பூதம் பாடப் புறங்காட் டிடையாடி
வேத வித்தகன் வேற்காடு
போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க்
கேதம் எய்துத லில்லையே. 3

ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன்
வீழ்ச டையினன் வேற்காடு
தாழ்வி டைமனத் தாற்பணிந் தேத்திடப்
பாழ்ப டும்மவர் பாவமே. 4

காட்டி னாலும் அயர்த்திடக் காலனை
வீட்டி னானுறை வேற்காடு
பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர்
ஓட்டி னார்வினை ஒல்லையே. 5

தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னானுறை வேற்காடு
நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலி னார்வினை மாயுமே. 6

மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர்
வில்லி னான்உறை வேற்காடு
சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர்
செல்ல வல்லவர் தீர்க்கமே. 7

மூரல் வெண்மதி சூடும் முடியுடை
வீரன் மேவிய வேற்காடு
வார மாய்வழி பாடுநி னைந்தவர்
சேர்வர் செய்கழல் திண்ணமே. 8

பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி
விரக்கி னான்உனறை வேற்காட்டூர்
அரக்கன் ஆண்மை யடரப்பட் டான்இறை
நெருக்கி னானை நினைமினே. 9

மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு
ஈறி லாமொழி யேமொழி யாஎழில்
கூறி னார்க்கில்லை குற்றமே. 10

விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச்
சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ்
கொண்டு பாடக் குணமாமே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment