ஓசை ஒலியெலா பாடல் வரிகள் (ocai oliyela) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறுஓசை ஒலியெலா

ஓசை ஒலியெலா மானாய் நீயே
உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 1

நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 2

கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 3

வானுற்ற மாமலைக ளானாய் நீயே
வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே
ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே
அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொன்மடவாள் பங்கன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 4

பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 5

உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 6

எல்லா வுலகமு மானாய் நீயே
ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 7

ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை யுடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 8

எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா வுலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 9

விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே
தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோ ள்விட் டெரியாட லுகந்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 10

ஆரு மறியா இடத்தாய் நீயே
ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்று மட்டாய் நீயே
ஒண்டா மரையானும் மாலுங் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment