நீறு தாங்கிய திருநுத பாடல் வரிகள் (niru tankiya tirunuta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருத்தினைநகர் – தீர்த்தனகிரி தலம் நடுநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : நடுநாடு
தலம் : திருத்தினைநகர் – தீர்த்தனகிரிநீறு தாங்கிய திருநுத

நீறு தாங்கிய திருநுத லானை
நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையி னானைக்
குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
கரிய சோதியை வரிவரால் உகளுஞ்
சேறு தாங்கிய திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. 1

பிணிகொள் ஆக்கை பிறப்பிறப் பென்னும்
இதனைநீக்கி ஈசன் திருவடி யிணைக்காள்
துணிய வேண்டிடிற் சொல்லுவன் கேள்நீ
அஞ்சல் நெஞ்சமே வஞ்சர்வாழ் மதின்மூன்
றணிகொள் வெஞ்சிலை யால்உகச் சீறும்
ஐயன் வையகம் பரவிநின் றேத்துந்
திணியும் வார்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. 2

வடிகொள் கண்ணிணை மடந்தையர் தம்பால்
மயல துற்றுவஞ் சனைக்கிட மாகி
முடியு மாகரு தேலெரு தேறும்
மூர்த்தி யைமுத லாயபி ரானை
அடிகள் என்றடி யார்தொழு தேத்தும்
அப்பன் ஒப்பிலா முலைஉமை கோனைச்
செடிகொள் கான்மலி திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. 3

பாவ மேபுரிந் தகலிடந் தன்னிற்
பலப கர்ந்தல மந்துயிர் வாழ்க்கைக்
காவ என்றுழந் தயர்ந்துவீ ழாதே
அண்ணல் தன்றிறம் அறிவினாற் கருதி
மாவின் ஈருரி உடைபுனைந் தானை
மணியை மைந்தனை வானவர்க் கமுதைத்
தேவ தேவனைத் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. 4

ஒன்ற லாவுயிர் வாழ்க்கையை நினைந்திட்
டுடல்த ளர்ந்தரு மாநிதி இயற்றி
என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும்
இதுவும் பொய்யென வேநினை உளமே
குன்று லாவிய புயமுடை யானைக்
கூத்த னைக்குலா விக்குவ லயத்தோர்
சென்றெ லாம்பயில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. 5

வேந்த ராயுல காண்டறம் புரிந்து
வீற்றி ருந்தஇவ் வுடலிது தன்னைத்
தேய்ந்தி றந்துவெந் துயருழந் திடுமிப்
பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்த ளங்கையில் ஆட்டுகந் தானைப்
பரமனைக் கடற் சூர்தடிந் திட்ட
சேந்தர் தாதையைத் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. 6

தன்னில் ஆசறு சித்தமு மின்றித்
தவ முயன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டியென் பணிந்தாற்
பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. 7

பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்
பலருங் கண்டழு தெழவுயிர் உடலைப்
பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தாற்
பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்த டங்கண்ணி பங்கனை உயிரைக்
கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. 8

நமையெ லாம்பலர் இகழ்ந்துரைப் பதன்முன்
நன்மை ஒன்றிலாத் தேரர்புன் சமணாஞ்
சமய மாகிய தவத்தினார் அவத்தத்
தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
உமையோர் கூறனை ஏறுகந் தானை
உம்பர் ஆதியை எம்பெரு மானைச்
சிமய மார்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே. 9

நீடு பொக்கையிற் பிறவியைப் பழித்து
நீங்க லாமென்று மனத்தினைத் தெருட்டிச்
சேடு லாம்பொழில் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைத் திருவடி யிணைதான்
நாடெ லாம்புகழ் நாவலூ ராளி
நம்பி வன்றொண்ட னூரன் உரைத்த
பாட லாந்தமிழ் பத்திவை வல்லார்
முத்தி யாவது பரகதிப் பயனே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment