நீற்றினையும் நெற்றிமே லிட்டார் பாடல் வரிகள் (nirrinaiyum nerrime littar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்நீற்றினையும் நெற்றிமே லிட்டார்
நீற்றினையும் நெற்றிமே லிட்டார் போலும்
நீங்காமே வெள்ளெலும்பு பூண்டார் போலுங்
காற்றினையுங் கடிதாக நடந்தார் போலுங்
கண்ணின்மேற் கண்ணொன் றுடையார் போலுங்
கூற்றினையுங் குரைகழலா லுதைத்தார் போலுங்
கொல்புலித்தோ லாடைக் குழகர் போலும்
ஆற்றினையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே. 1
பரியதோர் பாம்பரைமே லார்த்தார் போலும்
பாசுபதம் பார்த்தற் களித்தார் போலுங்
கரியதோர் களிற்றுரிவை போர்த்தார் போலுங்
காபாலங் கட்டங்கக் கொடியார் போலும்
பெரியதோர் மலைவில்லா எய்தார் போலும்
பேர்நந்தி யென்னும் பெயரார் போலும்
அரியதோர் அரணங்க ளட்டார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே. 2
துணியுடையர் தோலுடைய ரென்பார் போலுந்
தூய திருமேனிச் செல்வர் போலும்
பிணியுடைய அடியாரைத் தீர்ப்பார் போலும்
பேசுவார்க் கெல்லாம் பெரியார் போலும்
மணியுடைய மாநாக மார்ப்பார் போலும்
வாசுகிமா நாணாக வைத்தார் போலும்
அணியுடைய நெடுவீதி நடப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே. 3
ஓட்டகத்தே ஊணாக உகந்தார் போலும்
ஓருருவாய்த் தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங்
காட்டகத்தே ஆட லுடையார் போலுங்
காமரங்கள் பாடித் திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆனைந் துகந்தார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே. 4
ஏனத் திளமருப்புப் பூண்டார் போலும்
இமையவர்க ளேத்த இருந்தார் போலுங்
கானக்கல் லாற்கீழ் நிழலார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
வானத் திளமதிசேர் சடையார் போலும்
வான்கயிலை வெற்பின் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன்னெழுத்தாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே. 5
காமனையுங் கரியாகக் காய்ந்தார் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலுஞ்
சோமனையுஞ் செஞ்சடைமேல் வைத்தார் போலுஞ்
சொல்லாகிச் சொற்பொருளாய் நின்றார் போலும்
நாமனையும் வேதத்தார் தாமே போலும்
நங்கையோர் பால்மகிழ்ந்த நம்பர் போலும்
ஆமனையுந் திருமுடியார் தாமே போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே. 6
முடியார் மதியரவம் வைத்தார் போலும்
மூவுலகுந் தாமேயாய் நின்றார் போலுஞ்
செடியார் தலைப்பலிகொண் டுழல்வார் போலுஞ்
செல்கதி தான்கண்ட சிவனார் போலுங்
கடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலுங்
கங்காள வேடக் கருத்தர் போலும்
அடியார் அடிமை உகப்பார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே. 7
இந்திரத்தை இனிதாக ஈந்தார் போலும்
இமையவர்கள் வந்திறைஞ்சு மிறைவர் போலுஞ்
சுந்தரத்த பொடிதன்னைத் துதைந்தார் போலுந்
தூத்தூய திருமேனித் தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும்
மாநாகம் நாணாக வளைத்தார் போலும்
அந்திரத்தே அணியாநஞ் சுண்டார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே. 8
பிண்டத்தைக் காக்கும் பிரானார் போலும்
பிறவி யிறவி இலாதார் போலும்
முண்டத்து முக்கண் ணுடையார் போலும்
முழுநீறு பூசு முதல்வர் போலுங்
கண்டத் திறையே கறுத்தார் போலுங்
காளத்தி காரோணம் மேயார் போலும்
அண்டத்துக் கப்புறமாய் நின்றார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே. 9
ஒருகாலத் தொன்றாகி நின்றார் போலும்
ஊழி பலகண் டிருந்தார் போலும்
பெருகாமே வெள்ளந் தவிர்த்தார் போலும்
பிறப்பிடும்பை சாக்காடொன் றில்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும்
உகப்பார்தம் மனத்தென்றும் நீங்கார் போலும்
அருகாக வந்தென்னை அஞ்ச லென்பார்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே. 10
நன்றாக நடைபலவும் நவின்றார் போலும்
ஞானப் பெருங்கடற்கோர் நாதர் போலுங்
கொன்றாகிக் கொன்றதொன் றுண்டார் போலுங்
கோளரக்கர் கோன்றலைகள் குறைத்தார் போலுஞ்
சென்றார் திரிபுரங்க ளெய்தார் போலுந்
திசையனைத்து மாயனைத்து மானார் போலும்
அன்றாகில் ஆயிரம் பேரார் போலும்
அணியாரூர்த் திருமூலட் டான னாரே. 11
திருச்சிற்றம்பலம்