நிரைகழ லரவஞ் பாடல் வரிகள் (niraikala laravan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கோணமலை தலம் ஈழநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : ஈழநாடு
தலம் : திருக்கோணமலை
சுவாமி : திருக்கோணேஸ்வரர்
அம்பாள் : மாதுமையம்மை

நிரைகழ லரவஞ்

நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும்
நிமலர்நீ றணிதிரு மேனி
வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர்
கரைகெழு சந்துங் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றிக்
குரைகடல் ஓதம் நித்திலங் கொழிக்குங்
கோணமா மலையமர்ந் தாரே. 1

கடிதென வந்த கரிதனை யுரித்து
அவ்வுரி மேனிமேற் போர்ப்பர்
பிடியன நடையாள் பெய்வளை மடந்தை
பிறைநுத லவளொடும் உடனாய்க்
கொடிதெனக் கதறுங் குரைகடல் சூழ்ந்து
கொள்ளமுன் நித்திலஞ் சுமந்து
குடிதனை நெருங்கிப் பெருக்கமாய்த் தோன்றுங்
கோணமா மலையமர்ந் தாரே. 2

பனித்திளந் திங்கட் பைந்தலை நாகம்
படர்சடை முடியிடை வைத்தார்
கனித்திளந் துவர்வாய்க் காரிகை பாக
மாகமுன் கலந்தவர் மதின்மேற்
தனித்தபே ருருவ விழித்தழல் நாகந்
தாங்கிய மேருவெஞ் சிலையாக்
குனித்ததோர் வில்லார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே. 3

பழித்திளங் கங்கை சடைமுடி வைத்துப்
பாங்குடை மதனனைப் பொடியா
விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த
விமலனார் கமலமார் பாதர்
தெழித்துமுன் அரற்றுஞ் செழுங்கடற் றரளஞ்
செம்பொனும் இப்பியுஞ் சுமந்து
கொழித்துவன் றிரைகள் கரையிடைச் சேர்க்குங்
கோணமா மலையமர்ந் தாரே. 4

தாயினும் நல்ல தலைவரென் றடியார்
தம்மடி போற்றிசைப் பார்கள்
வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயிலும் பிணியுந் தொழலர்பால் நீக்கி
நுழைதரு நூலினர் ஞாலங்
கோயிலுஞ் சுனையுங் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே. 5

பரிந்துநன் மனத்தால் வழிபடும் மாணி
தன்னுயிர் மேல்வருங் கூற்றைத்
திரிந்திடா வண்ணம் உதைத்தவற் கருளுஞ்
செம்மையார் நம்மையா ளுடையார்
விரிந்துயர் மௌவல் மாதவி புன்னை
வேங்கைவண் செருந்திசெண் பகத்தின்
குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில்சூழ்
கோணமா மலையமர்ந் தாரே. 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலால்
ஏத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பும்
இறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை
தன்னருட் பெருமையும் வாழ்வுங்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புக ழாளர்
கோணமா மலையமர்ந் தாரே. 8

அருவரா தொருகை வெண்டலை யேந்தி
யகந்தொறும் பலியுடன் புக்க
பெருவரா யுறையும் நீர்மையர் சீர்மைப்
பெருங்கடல் வண்ணனும் பிரமன்
இருவரும் அறியா வண்ணம்ஒள் ளெரியாய்
உயர்ந்தவர் பெயர்ந்தநன் மாற்குங்
குருவராய் நின்றார் குரைகழல் வணங்கக்
கோணமா மலையமர்ந் தாரே. 9

நின்றுணுஞ் சமணும் இருந்துணுந் தேரும்
நெறியலா தனபுறங் கூற
வென்றுநஞ் சுண்ணும் பரிசினர் ஒருபால்
மெல்லிய லொடும்உட னாகித்
துன்றுமொண் பௌவ மவ்வலுஞ் சூழ்ந்து
தாழ்ந்துறு திரைபல மோதிக்
குன்றுமொண் கானல் வாசம்வந் துலவுங்
கோணமா மலையமர்ந் தாரே. 10

குற்றமி லாதார் குரைகடல் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரைக்
கற்றுணர் கேள்விக் காழியர் பெருமான்
கருத்துடை ஞானசம் பந்தன்
உற்றசெந் தமிழார் மாலை யீரைந்தும்
உரைப்பவர் கேட்பவர் உயர்ந்தோர்
சுற்றமு மாகித் தொல்வினை யடையார்
தோன்றுவர் வானிடைப் பொலிந்தே.

இத்தலம் ஈழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment