நினைந்துருகும் அடியாரை நைய பாடல் வரிகள் (ninainturukum atiyarai naiya) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநல்லூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநல்லூர்
சுவாமி : கல்யாணசுந்தரேஸ்வரர்
அம்பாள் : கல்யாண சுந்தரி

நினைந்துருகும் அடியாரை நைய

நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்
செழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்
இனந்துருவி மணிமகுடத் தேறத் துற்ற
இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப் பில்கி
நனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 1

பொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்
புலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்
மன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்
வார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்
மின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்
வேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்
நன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 2

தோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்
துன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்தப்
பாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்
பனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்
சிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்
நாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 3

வில்லருளி வருபுருவத் தொருத்தி பாகம்
பொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்
கல்லருளி வரிசிலையா வைத்தார் ஊராக்
கயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்
சொல்லருளி யறநால்வர்க் கறிய வைத்தார்
சுடுசுடலைப் பொடிவைத்தார் துறவி வைத்தார்
நல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 4

விண்ணிரியுந் திரிபுரங்க ளெரிய வைத்தார்
வினைதொழுவார்க் கறவைத்தார் துறவி வைத்தார்
கண்ணெரியாற் காமனையும் பொடியா வைத்தார்
கடிக்கமல மலர்வைத்தார் கயிலை வைத்தார்
திண்ணெரியுந் தண்புனலு முடனே வைத்தார்
திசைதொழுது மிசையமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ணரிய திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 5

உற்றுலவு பிணியுலகத் தெழுமை வைத்தார்
உயிர்வைத்தார் உயிர்செல்லுங் கதிகள் வைத்தார்
மற்றமரர் கணம்வைத்தார் அமரர் காணா
மறைவைத்தார் குறைமதியம் வளர வைத்தார்
செற்றமலி யார்வமொடு காம லோபஞ்
சிறவாத நெறிவைத்தார் துறவி வைத்தார்
நற்றவர்சேர் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 6

மாறுமலைந் தாரரண மெரிய வைத்தார்
மணிமுடிமே லரவைத்தா ரணிகொள் மேனி
நீறுமலிந் தெரியாடல் நிலவ வைத்தார்
நெற்றிமேற் கண்வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறுமலைந் தறுதிரைக ளெறிய வைத்தார்
ஆர்வத்தா லடியமரர் பரவ வைத்தார்
நாறுமலர்த் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 7

குலங்கள்மிகும் அலைகடல்கள் ஞாலம் வைத்தார்
குருமணிசே ரரவைத்தார் கோலம் வைத்தார்
உலங்கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார்
உண்டருளி விடம்வைத்தார் எண்டோ ள் வைத்தார்
நிலங்கிளரும் புனல்கனலுள் அனிலம் வைத்தார்
நிமிர்விசும்பின் மிசைவைத்தார் நினைந்தா ரிந்நாள்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 8

சென்றுருளுங் கதிரிரண்டும் விசும்பில் வைத்தார்
திசைபத்தும் இருநிலத்தில் திருந்த வைத்தார்
நின்றருளி யடியமரர் வணங்க வைத்தார்
நிறைதவமும் மறைபொருளும் நிலவ வைத்தார்
கொன்றருளிக் கொடுங்கூற்றம் நடுங்கி யோடக்
குரைகழற்சே வடிவைத்தார் விடையும் வைத்தார்
நன்றருளுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 9

பாம்புரிஞ்சி மதிகிடந்து திரைக ளேங்கப்
பனிக்கொன்றை சடைவைத்தார் பணிசெய் வானோர்
ஆம்பரிசு தமக்கெல்லாம் அருளும் வைத்தார்
அடுசுடலைப் பொடிவைத்தார் அழகும் வைத்தார்
ஓம்பரிய வல்வினைநோய் தீர வைத்தார்
உமையையொரு பால்வைத்தார் உகந்து வானோர்
நாம்பரவுந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே. 10

குலங்கிளரும் வருதிரைக ளேழும் வைத்தார்
குருமணிசேர் மலைவைத்தார் மலையைக் கையால்
உலங்கிளர எடுத்தவன்றோள் முடியும் நோவ
ஒருவிரலா லுறவைத்தார் இறைவா வென்று
புலம்புதலும் அருளொடுபோர் வாளும் வைத்தார்
புகழ்வைத்தார் புரிந்தாளாக் கொள்ள வைத்தார்
நலங்கிளருந் திருவடியென் றலைமேல் வைத்தார்
நல்லூரெம் பெருமானார் நல்ல வாறே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment