நில்லாத நீர்சடைமேல் பாடல் வரிகள் (nillata nircataimel) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பூந்துருத்தி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்பூந்துருத்திநில்லாத நீர்சடைமேல்
நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்
காணா தனவெல்லாங் காட்டி னானைத்
சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு
பொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 1
குற்றாலங் கோகரணம் மேவி னானைக்
கொடுங்கைக் கடுங்கூற்றைப் பாய்ந்தாந்தன்னை
உற்றால நஞ்சுண் டொடுக்கி னானை
யுணராவென் நெஞ்சை யுணர்வித் தானைப்
பற்றாலின் கீழங் கிருந்தான் தன்னைப்
பண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னைப்
புற்றா டரவார்த்த புனிதன் தன்னைப்
புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 2
எனக்கென்றும் இனியானை யெம்மான் தன்னை
யெழிலாரும் ஏகம்பம் மேயான் தன்னை
மனக்கென்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில்
நில்லானை நின்றியூர் மேயான் தன்னைத்
தனக்கென்றும் அடியானை யாளாக் கொண்ட
சங்கரனைச் சங்கவார் குழையான் தன்னைப்
புனக்கொன்றைத் தாரணிந்த புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 3
வெறியார் மலர்க்கொன்றை சூடி னானை
வெள்ளானை வந்திறைஞ்சும் வெண்காட் டானை
அறியா தடியே னகப்பட் டேனை
அல்லற்கடல் நின்று மேற வாங்கி
நெறிதா னிதுவென்று காட்டி னானை
நிச்சல் நலிபிணிகள் தீர்ப்பான் தன்னைப்
பொறியா டரவார்த்த புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 4
மிக்கானை வெண்ணீறு சண்ணித் தானை
விண்டார் புரமூன்றும் வேவ நோக்கி
நக்கானை நான்மறைகள் பாடி னானை
நல்லார்கள் பேணிப் பரவ நின்ற
தக்கானைத் தண்டா மரைமே லண்ணல்
தலைகொண்டு மாத்திரைக்கண் உலக மெல்லாம்
புக்கானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 5
ஆர்த்தானை வாசுகியை அரைக்கோர் கச்சா
அசைத்தானை அழகாய பொன்னார் மேனிப்
பூத்தானத் தான்முடியைப் பொருந்தா வண்ணம்
புணர்ந்தானைப் பூங்கணையா னுடலம் வேவப்
பார்த்தானைப் பரிந்தானைப் பனிநீர்க் கங்கை
படர்சடைமேற் பயின்றானைப் பதைப்ப யானை
போர்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 6
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும்
இமைப்பளவிற் பொடியாக எழிலார் கையால்
உரித்தானை மதகரியை யுற்றுப் பற்றி
யுமையதனைக் கண்டஞ்சி நடுங்கக் கண்டு
சிரித்தானைச் சீரார்ந்த பூதஞ் சூழத்
திருச்சடைமேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 7
வைத்தானை வானோ ருலக மெல்லாம்
வந்திறைஞ்சி மலர்கொண்டு நின்று போற்றும்
வித்தானை வேண்டிற்றொன் றீவான் தன்னை
விண்ணவர்தம் பெருமானை வினைகள் போக
உய்த்தானை யொலிகங்கை சடைமேற் றாங்கி
யொளித்தானை யொருபாகத் துமையோ டாங்கே
பொய்த்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 8
ஆண்டானை வானோ ருலக மெல்லாம்
அந்நா ளறியாத தக்கன் வேள்வி
மீண்டாணை விண்ணவர்க ளோடுங் கூடி
விரைமலர்மேல் நான்முகனும் மாலுந் தேட
நீண்டானை நெருப்புருவ மானான் தன்னை
நிலையிலார் மும்மதிலும் வேவ வில்லைப்
பூண்டானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 9
மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் தன்னை
மணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால்
இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை
யெண்டிசைக்கும் கண்ணானான் சிரமே லொன்றை
அறுத்தானை யமரர்களுக் கமுதீந் தானை
யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு
பொறுத்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்
பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 10
திருச்சிற்றம்பலம்