நெற்றிமேற் கண்ணி பாடல் வரிகள் (nerrimer kanni) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கோடிகா – திருக்கோடிக்காவல் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கோடிகா – திருக்கோடிக்காவல்
சுவாமி : கோடீசுவரர்
அம்பாள் : வடிவாம்பிகையம்மை

நெற்றிமேற் கண்ணி

நெற்றிமேற் கண்ணி னானே
நீறுமெய் பூசி னானே
கற்றைப்புன் சடையி னானே
கடல்விடம் பருகி னானே
செற்றவர் புரங்கள் மூன்றுஞ்
செவ்வழல் செலுத்தி னானே
குற்றமில் குணத்தி னானே
கோடிகா வுடைய கோவே. 1

கடிகமழ் கொன்றை யானே
கபாலங்கை யேந்தி னானே
வடிவுடை மங்கை தன்னை
மார்பிலோர் பாகத் தானே
அடியிணை பரவ நாளும்
அடியவர்க் கருள்செய் வானே
கொடியணி விழவ தோவாக்
கோடிகா வுடைய கோவே. 2

நீறுமெய் பூசி னானே
நிழல்திகழ் மழுவி னானே
ஏறுகந் தேறி னானே
இருங்கடல் அமுதொப் பானே
ஆறுமோர் நான்கு வேதம்
அறமுரைத் தருளி னானே
கூறுமோர் பெண்ணி னானே
கோடிகா வுடைய கோவே. 3

காலனைக் காலாற் செற்றன்
றருள்புரி கருணை யானே
நீலமார் கண்டத் தானே
நீண்முடி யமரர் கோவே
ஞாலமாம் பெருமை யானே
நளிரிளந் திங்கள் சூடுங்
கோலமார் சடையி னானே
கோடிகா வுடைய கோவே. 4

பூணர வாரத் தானே
புலியுரி அரையி னானே
காணில்வெண் கோவ ணமுங்
கையிலோர் கபால மேந்தி
ஊணுமூர்ப் பிச்சை யானே
உமையொரு பாகத் தானே
கோணல்வெண் பிறையி னானே
கோடிகா வுடைய கோவே. 5

கேழல்வெண் கொம்பு பூண்ட
கிளரொளி மார்பி னானே
ஏழையேன் ஏழை யேன்நான்
என்செய்கேன் எந்தை பெம்மான்
மாழையொண் கண்ணி னார்கள்
வலைதனில் மயங்கு கின்றேன்
கூழைஏ றுடைய செல்வா
கோடிகா வுடைய கோவே. 6

அழலுமிழ் அங்கை யானே
அரிவையோர் பாகத் தானே
தழலுமிழ் அரவம் ஆர்த்துத்
தலைதனிற் பலிகொள் வானே
நிழலுமிழ் சோலை சூழ
நீள்வரி வண்டி னங்கள்
குழலுமிழ் கீதம் பாடுங்
கோடிகா வுடைய கோவே. 7

ஏவடு சிலையி னாலே
புரமவை எரிசெய் தானே
மாவடு வகிர்கொள் கண்ணாள்
மலைமகள் பாகத் தானே
ஆவடு துறையு ளானே
ஐவரால் ஆட்டப் பட்டேன்
கோவடு குற்றந் தீராய்
கோடிகா வுடைய கோவே. 8

ஏற்றநீர்க் கங்கை யானே
இருநிலந் தாவி னானும்
நாற்றமா மலர்மேல் ஏறும்
நான்முகன் இவர்கள் கூடி
ஆற்றலால் அளக்க லுற்றார்க்
கழலுரு வாயினானே
கூற்றுக்குங் கூற்ற தானாய்
கோடிகா வுடைய கோவே. 9

பழகநான் அடிமை செய்வேன்
பசுபதீ பாவ நாசா
மழகளி யானை யின்றோல்
மலைமகள் வெருவப் போர்த்த
அழகனே அரக்கன் திண்டோ ள்
அருவரை நெரிய வூன்றுங்
குழகனே கோல மார்பா
கோடிகா வுடைய கோவே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment