நங்கையைப் பாகம் பாடல் வரிகள் (nankaiyaip pakam) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருகழிப்பாலை – சிவபுரி தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருகழிப்பாலை – சிவபுரி
சுவாமி : பால்வண்ணவீசுவரர்
அம்பாள் : பொற்பதவேதநாயகி
நங்கையைப் பாகம்
நங்கையைப் பாகம் வைத்தார்
ஞானத்தை நவில வைத்தார்
அங்கையில் அனலும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்
தங்கையின் யாழும் வைத்தார்
தாமரை மலரும் வைத்தார்
கங்கையைச் சடையுள் வைத்தார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 1
விண்ணினை விரும்ப வைத்தார்
வேள்வியை வேட்க வைத்தார்
பண்ணினைப் பாட வைத்தார்
பத்தர்கள் பயில வைத்தார்
மண்ணினைத் தாவ நீண்ட
மாலினுக் கருளும் வைத்தார்
கண்ணினை நெற்றி வைத்தார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 2
வாமனை வணங்க வைத்தார்
வாயினை வாழ்த்த வைத்தார்
சோமனைச் சடைமேல் வைத்தார்
சோதியுட் சோதி வைத்தார்
ஆமனை யாட வைத்தார்
அன்பெனும் பாசம் வைத்தார்
காமனைக் காய்ந்த கண்ணார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 3
அரியன அங்கம் வேதம்
அந்தணர்க் கருளும் வைத்தார்
பெரியன புரங்கள் மூன்றும்
பேரழ லுண்ண வைத்தார்
பரியதீ வண்ண ராகிப்
பவளம்போல் நிறத்தை வைத்தார்
கரியதோர் கண்டம் வைத்தார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 4
கூரிருள் கிழிய நின்ற
கொடுமழுக் கையில் வைத்தார்
பேரிருள் கழிய மல்கு
பிறைபுனற் சடையுள் வைத்தார்
ஆரிருள் அண்டம் வைத்தார்
அறுவகைச் சமயம் வைத்தார்
காரிருள் கண்டம் வைத்தார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 5
உட்டங்கு சிந்தை வைத்தார்
உள்குவார்க் குள்ளம் வைத்தார்
விட்டங்கு வேள்வி வைத்தார்
வெந்துயர் தீர வைத்தார்
நட்டங்கு நடமும் வைத்தார்
ஞானமு நவில வைத்தார்
கட்டங்கந் தோண்மேல் வைத்தார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 6
ஊனப்பே ரொழிய வைத்தார்
ஓதியே உணர வைத்தார்
ஞானப்பேர் நவில வைத்தார்
ஞானமு நடுவும் வைத்தார்
வானப்பே ராறும் வைத்தார்
வைகுந்தற் காழி வைத்தார்
கானப்பேர் காதல் வைத்தார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே 7
கொங்கினும் அரும்பு வைத்தார்
கூற்றங்கள் கெடுக்க வைத்தார்
சங்கினுள் முத்தம் வைத்தார்
சாம்பலும் பூச வைத்தார்
அங்கமும் வேதம் வைத்தார்
ஆலமும் உண்டு வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 8
சதுர்முகன் தானும் மாலுந்
தம்மிலே இகலக் கண்டு
எதிர்முக மின்றி நின்ற
எரியுரு வதனை வைத்தார்
பிதிர்முகன் காலன் றன்னைக்
கால்தனிற் பிதிர வைத்தார்
கதிர்முகஞ் சடையில் வைத்தார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே. 9
மாலினாள் நங்கை அஞ்ச
மதிலிலங் கைக்கு மன்னன்
வேலினான் வெகுண் டெடுக்கக்
காண்டலும் வேத நாவன்
நூலினான் நோக்கி நக்கு
நொடிப்பதோ ரளவில் வீழக்
காலினால் ஊன்றி யிட்டார்
கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்