நனவிலுங் கனவிலும் பாடல் வரிகள் (nanavilun kanavilum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கருக்குடி – மருதாந்தநல்லூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : கருக்குடி – மருதாந்தநல்லூர்
சுவாமி : சற்குணலிங்கேசுவரர்
அம்பாள் : சர்வாலங்கிரதமின்னம்மை
நனவிலுங் கனவிலும்
நனவிலுங் கனவிலும்
நாளுந் தன்னொளி
நினைவிலும் எனக்குவந்
தெய்தும் நின்மலன்
கனைகடல் வையகந்
தொழு கருக்குடி
அனலெரி யாடுமெம்
மடிகள் காண்மினே. 1
வேதியன் விடையுடை
விமலன் ஒன்னலர்
மூதெயில் எரியெழ
முனிந்த முக்கணன்
காதியல் குழையினன்
கருக்கு டியமர்
ஆதியை அடிதொழ
அல்லல் இல்லையே. 2
மஞ்சுறு பொழில்வளம்
மலி கருக்குடி
நஞ்சுறு திருமிட
றுடைய நாதனார்
அஞ்சுரும் பார்குழல்
அரிவை யஞ்சவே
வெஞ்சுரந் தனில்விளை
யாட லென்கொலோ. 3
ஊனுடைப் பிறவியை
அறுக்க வுன்னுவீர்
கானிடை யாடலான்
பயில் கருக்குடிக்
கோனுயர் கோயிலை
வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல்
வாழ்த்தி வாழ்மினே. 4
சூடுவர் சடையிடைக்
கங்கை நங்கையைக்
கூடுவ ருலகிடை
யையங் கொண்டொலி
பாடுவ ரிசைபறை
கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி
அண்ணல் வண்ணமே. 5
இன்புடை யாரிசை
வீணை பூணரா
என்புடை யாரெழில்
மேனி மேலெரி
முன்புடை யார்முத
லேத்தும் அன்பருக்
கன்புடை யார்கருக்
குடியெம் மண்ணலே. 6
காலமும் ஞாயிறுந்
தீயு மாயவர்
கோலமும் முடியர
வணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர்
திருக் கருக்குடிச்
சாலவும் இனிதவ
ருடைய தன்மையே. 7
எறிகடல் புடைதழு
விலங்கை மன்னனை
முறிபட வரையிடை
யடர்த்த மூர்த்தியார்
கறைபடு பொழில்மதி
தவழ் கருக்குடி
அறிவொடு தொழுமவர்
ஆள்வர் நன்மையே. 8
பூமனுந் திசைமுகன்
தானும் பொற்பமர்
வாமனன் அறிகிலா
வண்ண மோங்கெரி
ஆமென வுயர்ந்தவன்
அணி கருக்குடி
நாமன னினில்வர
நினைதல் நன்மையே. 9
சாக்கியர் சமண்படு
கையர் பொய்ம்மொழி
ஆக்கிய வுரைகொளேல்
அருந் திருந்நமக்
காக்கிய அரனுறை
யணிக ருக்குடிப்
பூக்கமழ் கோயிலே
புடைபட் டுய்ம்மினே. 10
கானலில் விரைமலர்
விம்மு காழியான்
வானவன் கருக்குடி
மைந்தன் தன்னொளி
ஆனமெய்ஞ் ஞானசம்
பந்தன் சொல்லிய
ஊனமில் மொழிவலார்க்
குயரும் இன்பமே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்