நம்பனை நால்வேதங் பாடல் வரிகள் (nampanai nalvetan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாவடுதுறை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாவடுதுறைநம்பனை நால்வேதங்

நம்பனை நால்வேதங் கரைகண் டானை
ஞானப் பெருங்கடலை நன்மை தன்னைக்
கம்பனைக் கல்லா லிருந்தான் தன்னைக்
கற்பகமா யடியார்கட் கருள்செய் வானைச்
செம்பொன்னைப் பவளத்தைத் திரளு முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயை நீரை
அம்பொன்னை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 1

மின்னானை மின்னிடைச்சே ருருமி னானை
வெண்முகிலாய் எழுந்துமழை பொழிவான் தன்னைத்
தன்னானைத் தன்னொப்பா ரில்லா தானைத்
தாயாகிப் பல்லுயிர்க்கோர் தந்தை யாகி
என்னானை யெந்தை பெருமான் தன்னை
இருநிலமும் அண்டமுமாய்ச் செக்கர் வானே
அன்னானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 2

பத்தர்கள் சித்தத்தே பாவித் தானைப்
பவளக் கொழுந்தினை மாணிக் கத்தின்
தொத்தினைத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சொல்லுவார் சொற்பொருளின் தோற்ற மாகி
வித்தினை முளைக்கிளையை வேரைச் சீரை
வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 3

பேணியநற் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
பித்தராம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை யிடர்க்கடலுட் சுழிக்கப் பட்டிங்
கிளைக்கின்றேற் கக்கரைக்கே யேற வாங்குந்
தோணியைத் தொண்டனேன் தூய சோதிச்
சுலாவெண் குழையானைச் சுடர்பொற் காசின்
ஆணியை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 4

ஒருமணியை உலகுக்கோ ருறுதி தன்னை
உதயத்தி னுச்சியை உருமா னானைப்
பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்
பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்
தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி
அருமணியை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 5

ஏற்றானை யெண்டோ ளுடையான் தன்னை
யெல்லி நடமாட வல்லான் தன்னைக்
கூற்றானைக் கூற்ற முதைத்தான் தன்னைக்
குரைகடல்வாய் நஞ்சுண்ட கண்டன் தன்னை
நீற்றானை நீளரவொன் றார்த்தான் தன்னை
நீண்ட சடை முடிமேல் நீரார் கங்கை
ஆற்றானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 6

கைம்மான மதகளிற்றை உரித்தான் தன்னைக்
கடல்வரைவா னாகாச மானான் தன்னைச்
செம்மானப் பவளத்தைத் திகழும் முத்தைத்
திங்களை ஞாயிற்றைத் தீயா னானை
எம்மானை என்மனமே கோயி லாக
இருந்தானை என்புருகும் அடியார் தங்கள்
அம்மானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 7

மெய்யானைப் பொய்யரொடு விரவா தானை
வெள்ளடையைத் தண்ணிழலை வெந்தீ யேந்துங்
கையானைக் காமனுடல் வேவக் காய்ந்த
கண்ணானைக் கண்மூன் றுடையான் தன்னைப்
பையா டரவமதி யுடனே வைத்த
சடையானைப் பாய்புலித்தோ லுடையான் தன்னை
ஐயானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 8

வேண்டாமை வேண்டுவது மில்லான் தன்னை
விசயனைமுன் னசைவித்த வேடன் தன்னைத்
தூண்டாமைச் சுடர்விடுநற் சோதி தன்னைச்
சூலப் படையானைக் காலன் வாழ்நாள்
மாண்டோட வுதைசெய்த மைந்தன் தன்னை
மண்ணவரும் விண்ணவரும் வணங்கி யேத்தும்
ஆண்டானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 9

பந்தணவு மெல்விரலாள் பாகன் தன்னைப்
பாடலோ டாடல் பயின்றான் தன்னைக்
கொந்தணவு நறுங்கொன்றை மாலை யானைக்
கோலமா நீல மிடற்றான் தன்னைச்
செந்தமிழோ டாரியனைச் சீரி யானைத்
திருமார்பிற் புரிவெண்ணூல் திகழப் பூண்ட
அந்தணனை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 10

தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் தன்னைத்
தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் தன்னைப்
பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப்
பெருவலியால் மலையெடுத்த அரக்கன் தன்னை
நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை
நீசனேன் உடலுறு நோயான தீர
அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய
அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment