நல்வெணெய் விழுதுபெய் பாடல் வரிகள் (nalveney vilutupey) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநெல்வெண்ணெய் தலம் நடுநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : நடுநாடு
தலம் : திருநெல்வெண்ணெய்
அம்பாள் : நீலமலர்க்கண்ணம்மை

நல்வெணெய் விழுதுபெய்

நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
நெல்வெணெய் மேவிய நீரே
நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்
சொல்வணம் இடுவது சொல்லே. 1

நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
கச்சிள அரவசைத் தீரே
கச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர்
அச்சமொ டருவினை யிலரே. 2

நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
அரைவிரி கோவணத் தீரே
அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
உரைவிரிப் போருயர்ந் தோரே. 3

நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
ஊர்மல்கி உறையவல் லீரே
ஊர்மல்கி உறையவல் லீருமை யுள்குதல்
பார்மல்கு புகழவர் பண்பே. 4

நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
ஆடிளம் பாப்பசைத் தீரே
ஆடிளம் பாப்பசைத் தீருமை அன்பொடு
பாடுளம் உடையவர் பண்பே. 5

நெற்றியொர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே. 6

நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
கறையணி மிடறுடை யீரே
கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
உறைவதும் உம்மடிக் கீழே. 7

நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை அசைவுசெய் தீரே
அரக்கனை யசைவுசெய் தீருமை அன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே. 8

நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்
றிருவரை யிடர்கள்செய் தீரே
இருவரை யிடர்கள்செய் தீருமை யிசைவொடு
பரவவல் லார்பழி யிலரே. 9

நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
சாக்கியச் சமண்கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கியம் உடையவர் பண்பே. 10

நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் யீசனை
நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே.

இத்தலம் நடுநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment