நல்லார் தீமேவுந் தொழிலார் பாடல் வரிகள் (nallar timevun tolilar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : சீர்காழி
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

நல்லார் தீமேவுந் தொழிலார்

*நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ்
சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த
வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங்
கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.1 1

துளிவண் தேன்பாயும் இதழி தூமத்தந்
தெளிவெண் டிங்கள்மா சுணநீர் திகழ்சென்னி
ஒளிவெண் டலைமாலை உகந்தா னூர்போலுங்
களிவண் டியாழ்செய்யுங் காழிந் நகர்தானே. 2

ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச்
சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால்
பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால்
காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே. 3

இப்பதிகத்தில் 4-ஆம் செய்யுள் மறைந்துபோயின. 4

இப்பதிகத்தில் 5-ஆம் செய்யுள் மறைந்துபோயின. 5

இப்பதிகத்தில் 6-ஆம் செய்யுள் மறைந்துபோயின. 6

இப்பதிகத்தில் 7-ஆம் செய்யுள் மறைந்துபோயின. 7

இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும்
நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும்
பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங்
கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே. 8

மாலும் பிரமனும் அறியா மாட்சியான்
தோலும் புரிநூலுந் துதைந்த வரைமார்பன்
ஏலும் பதிபோலும் இரந்தோர்க் கெந்நாளுங்
காலம் பகராதார் காழிந் நகர்தானே. 9

தங்கை யிடவுண்பார் தாழ்சீ வரத்தார்கள்
பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள்
மங்கை யொருபாகம் மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக்
கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே. 10

வாசம் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த
ஈசன் நகர்தன்னை இணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப்
பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment