நல்லர் நல்லதோர் பாடல் வரிகள் (nallar nallator) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநாகேச்சுரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநாகேச்சுரம்
சுவாமி : செண்பகாரணியேசுவரர்
அம்பாள் : குன்றமுலைநாயகி

நல்லர் நல்லதோர்

நல்லர் நல்லதோர்
நாகங்கொண் டாட்டுவர்
வல்லர் வல்வினை
தீர்க்கும் மருந்துகள்
பல்லில் ஓடுகை
யேந்திப் பலிதிரி
செல்வர் போல்திரு
நாகேச் சரவரே. 1

நாவ லம்பெருந்
தீவினில் வாழ்பவர்
மேவி வந்து
வணங்கி வினையொடு
பாவ மாயின
பற்றறு வித்திடுந்
தேவர் போல்திரு
நாகேச் சரவரே. 2

ஓத மார்கட
லின்விட முண்டவர்
ஆதி யார்அய
னோடம ரர்க்கெலாம்
மாதொர் கூறர்
மழுவல னேந்திய
நாதர் போல்திரு
நாகேச் சரவரே. 3

சந்தி ரன்னொடு
சூரியர் தாமுடன்
வந்து சீர்வழி
பாடுகள் செய்தபின்
ஐந்த லையர
வின்பணி கொண்டருள்
மைந்தர் போல்மணி
நாகேச் சரவரே. 4

பண்டோர் நாளிகழ்
வான்பழித் தக்கனார்
கொண்ட வேள்விக்
குமண்டை யதுகெடத்
தண்ட மாவிதா
தாவின் றலைகொண்ட
செண்டர் போல்திரு
நாகேச் சரவரே. 5

வம்பு பூங்குழல்
மாது மறுகவோர்
கம்ப யானை
யுரித்த கரத்தினர்
செம்பொ னாரித
ழிம்மலர்ச் செஞ்சடை
நம்பர் போல்திரு
நாகேச் சரவரே. 6

மானை யேந்திய
கையினர் மையறு
ஞானச் சோதியர்
ஆதியர் நாமந்தான்
ஆன அஞ்செழுத்
தோதவந் தண்ணிக்குந்
தேனர் போல்திரு
நாகேச் சரவரே. 7

கழல்கொள் காலினர்
காலனைக் காய்ந்தவர்
தழல்கொள் மேனியர்
சாந்தவெண் ணீறணி
அழகர் ஆல்நிழற்
கீழற மோதிய
குழகர் போல்குளிர்
நாகேச் சரவரே. 8

வட்ட மாமதில்
மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கைய
ராகிலுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை
தீர்த்துக் குளிர்விக்குஞ்
சிட்டர் போல்திரு
நாகேச் சரவரே. 9

தூர்த்தன் றோண்முடி
தாளுந் தொலையவே
சேர்த்தி னார்திருப்
பாதத் தொருவிரல்
ஆர்த்து வந்துல
கத்தவ ராடிடுந்
தீர்த்தர் போல்திரு
நாகேச் சரவரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment