நலச்சங்க வெண்குழையுந் பாடல் வரிகள் (nalaccanka venkulaiyun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருத்தலைச்சங்காடு தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருத்தலைச்சங்காடு
சுவாமி : சங்காரண்யேஸ்வரர்
அம்பாள் : சௌந்திரநாயகி

நலச்சங்க வெண்குழையுந்

நலச்சங்க வெண்குழையுந்
தோடும்பெய்தோர் நால்வேதம்
சொலச்சங்கை யில்லாதீர்
சுடுகாடல்லாற் கருதாதீர்
குலைச்செங்காய்ப் பைங்கமுகின்
குளிர்கொள்சோலைக் குயிலாலும்`
தலைச்சங்கைக் கோயிலே
கோயிலாகத் தாழ்ந்தீரே. 1

துணிமல்கு கோவணமுந்
தோலுங்காட்டித் தொண்டாண்டீர்
மணிமல்கு கண்டத்தீர்
அண்டர்க்கெல்லாம் மாண்பானீர்
பிணிமல்கு நூல்மார்பர்
பெரியோர்வாழுந் தலைச்சங்கை
அணிமல்கு கோயிலே
கோயிலாக அமர்ந்தீரே 2

சீர்கொண்ட பாடலீர்
செங்கண்வெள்ளே றூர்தியீர்
நீர்கொண்டும் பூக்கொண்டும்
நீங்காத்தொண்டர் நின்றேத்தத்
தார்கொண்ட நூல்மார்பர்
தக்கோர்வாழுந் தலைச்சங்கை
ஏர்கொண்ட கோயிலே
கோயிலாக இருந்தீரே 3

வேடஞ்சூழ் கொள்கையீர்
வேண்டிநீண்ட வெண்டிங்கள்
ஓடஞ்சூழ் கங்கையும்
உச்சிவைத்தீர் தலைச்சங்கைக்
கூடஞ்சூழ் மண்டபமுங்
குலாயவாசற் கொடித்தோன்றும்
மாடஞ்சூழ் கோயிலே
கோயிலாக மகிழ்ந்தீரே 4

சூலஞ்சேர் கையினீர்
சுண்ணவெண்ணீ றாடலீர்
நீலஞ்சேர் கண்டத்தீர்
நீண்டசடைமேல் நீரேற்றீர்
ஆலஞ்சேர் தண்கானல்
அன்னமன்னுந் தலைச்சங்கைக்
கோலஞ்சேர் கோயிலே
கோயிலாகக் கொண்டீரே 5

நிலநீரொ டாகாசம்
அனல்காலாகி நின்றைந்து
புலநீர்மை புறங்கண்டார்
பொக்கஞ்செய்யார் போற்றோவார்
சலநீத ரல்லாதார்
தக்கோர்வாழுந் தலைச்சங்கை
நலநீர கோயிலே
கோயிலாக நயந்தீரே 6

அடிபுல்கு பைங்கழல்கள்
ஆர்ப்பப்பேர்ந்தோர் அனலேந்திக்
கொடிபுல்கு மென்சாயல்
உமையோர்பாகங் கூடினீர்
பொடிபுல்கு நூல்மார்பர்
புரிநூலாளர் தலைச்சங்கைக்
கடிபுல்கு கோயிலே
கோயிலாகக் கலந்தீரே 7

திரையார்ந்த மாகடல்சூழ்
தென்இலங்கைக் கோமானை
வரையார்ந்த தோளடர
விரலாலூன்றும் மாண்பினீர்
அரையார்ந்த மேகலையீர்
அந்தணாளர் தலைச்சங்கை
நிரையார்ந்த கோயிலே
கோயிலாக நினைந்தீரே 8

பாயோங்கு பாம்பணைமே
லானும்பைந்தா மரையானும்
போயோங்கிக் காண்கிலார்
புறம்நின்றோரார் போற்றோவார்
தீயோங்கு மறையாளர்
திகழுஞ்செல்வத் தலைச்சங்கைச்
சேயோங்கு கோயிலே
கோயிலாகச் சேர்ந்தீரே 9

அலையாரும் புனல்துறந்த
அமணர்குண்டர் சாக்கியர்
தொலையாதங் கலர்தூற்றத்
தோற்றங்காட்டி யாட்கொண்டீர்
தலையான நால்வேதந்
தரித்தார்வாழுந் தலைச்சங்கை
நிலையார்ந்த கோயிலே
கோயிலாக நின்றீரே 10

நளிரும் புனற்காழி
நல்லஞான சம்பந்தன்
குளிருந் தலைச்சங்கை
ஓங்குகோயில் மேயானை
ஒளிரும் பிறையானை
உரைத்தபாடல் இவைவல்லார்
மிளிருந் திரைசூழ்ந்த
வையத்தார்க்கு மேலாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment