மூவிலைவேற் சூலம்வல பாடல் வரிகள் (muvilaiver culamvala) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கஞ்சனூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : கஞ்சனூர்மூவிலைவேற் சூலம்வல

மூவிலைநற் சூலம்வல னேந்தி னானை
மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை
நாவலனை நரைவிடையொன் றேறு வானை
நால்வேத மாறங்க மாயி னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை
அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங்
காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 1

தலையேந்து கையானை என்பார்த் தானைச்
சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்
குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்
கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை
மலையானை மற்றொப்பா ரில்லா தானை
மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்
கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 2

தொண்டர்குழாந் தொழுதேத்த அருள்செய் வானைச்
சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்
தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்
செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்
பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்
பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட
கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 3

விண்ணவனை மேருவில்லா வுடையான் றன்னை
மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்
பெண்ணவனை ஆணவனைப் பித்தன் றன்னைப்
பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை
எண்ணவனை எண்டிசையுங் கீழு மேலும்
இருவிசும்பு மிருநிலமு மாகித் தோன்றுங்
கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 4

உருத்திரனை உமாபதியை உலகா னானை
உத்தமனை நித்திலத்தை ஒருவன் றன்னைப்
பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்
பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற
நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை
நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 5

ஏடேறு மலர்க்கொன்றை அரவு தும்பை
இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கைச்
சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்
செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்
கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்
கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்
காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 6

நாரணனும் நான்முகனு மறியா தானை
நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்
பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்
பால்வணனைத் தீவணனைப் பகலா னானை
வார்பொதியும் முலையாளோர் கூறன் றன்னை
மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்
கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 7

வானவனை வலிவலமும் மறைக்காட் டானை
மதிசூடும் பெருமானை மறையோன் றன்னை
ஏனவனை இமவான்றன் பேதை யோடும்
இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் றன்னைத்
தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங்
கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 8

நெருப்புருவத் திருமேனி வெண்ணீற் றானை
நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்
தருக்கழிய முயலகன்மேற் றாள்வைத் தானைச்
சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை
விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை
விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்
கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 9

மடலாழித் தாமரையா யிரத்தி லொன்று
மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்
சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்
தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட
அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை
அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்
கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment