மூத்தவனை வானவர்க்கு பாடல் வரிகள் (muttavanai vanavarkku) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கற்குடி – உய்யக்கொண்டான்மலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : கற்குடி – உய்யக்கொண்டான்மலைமூத்தவனை வானவர்க்கு

மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி
முதலவனைத் திருவரையின் மூக்கப் பாம்பொன்
றார்த்தவனை அக்கரவம் ஆர மாக
அணிந்தவனைப் பணிந்தடியா ரடைந்த வன்போ
டேத்தவனை இறுவரையிற் றேனை ஏனோர்க்
கின்னமுதம் அளித்தவனை யிடரை யெல்லாங்
காத்தவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 1

செய்யானை வெளியானைக் கரியான் றன்னைத்
திசைமுகனைத் திசையெட்டுஞ் செறிந்தான் றன்னை
ஐயானை நொய்யானைச் சீரி யானை
அணியானைச் சேயானை ஆனஞ் சாடும்
மெய்யானைப் பொய்யாது மில்லான் றன்னை
விடையானைச் சடையானை வெறித்த மான்கொள்
கையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 2

மண்ணதனில் ஐந்தைமா நீரில் நான்கை
வயங்கெரியில் மூன்றைமா ருதத்தி ரண்டை
விண்ணதனி லொன்றை விரிக திரைத்
தண்மதியைத் தாரகைகள் தம்மின் மிக்க
எண்ணதனில் எழுத்தையே ழிசையைக் காமன்
எழிலழிய எரியுமிழ்ந்த இமையா நெற்றிக்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 3

நற்றவனைப் புற்றரவ நாணி னானை
நாணாது நகுதலையூண் நயந்தான் றன்னை
முற்றவனை மூவாத மேனி யானை
முந்நீரின் நஞ்சமுகந் துண்டான் றன்னைப்
பற்றவனைப் பற்றார்தம் பதிகள் செற்ற
படையானை அடைவார்தம் பாவம் போக்கக்
கற்றவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 4

சங்கைதனைத் தவிர்த்தாண்ட தலைவன் றன்னைச்
சங்கரனைத் தழலுறுதாள் மழுவாள் தாங்கும்
அங்கையனை அங்கமணி ஆகத் தானை
ஆகத்தோர் பாகத்தே அமர வைத்த
மங்கையனை மதியொடுமா சுணமுந் தம்மின்
மருவவிரி சடைமுடிமேல் வைத்த வானீர்க்
கங்கையனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 5

பெண்ணவனை ஆணவனைப் பேடா னானைப்
பிறப்பிலியை இறப்பிலியைப் பேரா வாணி
விண்ணவனை விண்ணவர்க்கு மேலா னானை
வேதியனை வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனைப் பண்ணில்வரு பயனா னானைப்
பாரவனைப் பாரில்வாழ் உயிர்கட் கெல்லாங்
கண்ணவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 6

பண்டானைப் பரந்தானைக் குவிந்தான் றன்னைப்
பாரானை விண்ணாயிவ் வுலக மெல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான் றன்னை
ஒருவருந்தன் பெருமைதனை அறிய வொண்ணா
விண்டானை விண்டார்தம் புரங்கள் மூன்றும்
வெவ்வழலில் வெந்துபொடி யாகி வீழக்
கண்டானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 7

வானவனை வானவர்க்கு மேலா னானை
வணங்குமடி யார்மனத்துள் மருவிப் புக்க
தேனவனைத் தேவர்தொழு கழலான் றன்னைச்
செய்குணங்கள் பலவாகி நின்ற வென்றிக்
கோனவனைக் கொல்லைவிடை யேற்றி னானைக்
குழல்முழவம் இயம்பக்கூத் தாட வல்ல
கானவனைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 8

கொலையானை யுரிபோர்த்த கொள்கை யானைக்
கோளரியைக் கூரம்பா வரைமேற் கோத்த
சிலையானைச் செம்மைதரு பொருளான் றன்னைத்
திரிபுரத்தோர் மூவர்க்குச் செம்மை செய்த
தலையானைத் தத்துவங்க ளானான் றன்னைத்
தையலோர் பங்கினனைத் தன்கை யேந்து
கலையானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 9

பொழிலானைப் பொழிலாரும் புன்கூ ரானைப்
புறம்பயனை அறம்புரிந்த புகலூ ரானை
எழிலானை இடைமருதி னிடங்கொண் டானை
ஈங்கோய்நீங் காதுறையும் இறைவன் றன்னை
அழலாடு மேனியனை அன்று சென்றக்
குன்றெடுத்த அரக்கன்றோள் நெரிய வூன்றுங்
கழலானைக் கற்குடியில் விழுமி யானைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment