முத்தன்மிகு மூவிலைநல் பாடல் வரிகள் (muttanmiku muvilainal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பழுவூர் – கீழப்பலூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பழுவூர் – கீழப்பலூர்
சுவாமி : வடவனநாதர்
அம்பாள் : அருந்தவநாயகியம்மை

முத்தன்மிகு மூவிலைநல்

முத்தன்மிகு மூவிலைநல்
வேலன்விரி நூலன்
அத்தன்எமை யாளுடைய
அண்ணலிட மென்பர்
மைத்தழை பெரும்பொழிலின்
வாசமது வீசப்
பத்தரொடு சித்தர்பயில்
கின்றபழு வூரே. 1

கோடலொடு கோங்கவை
குலாவுமுடி தன்மேல்
ஆடரவம் வைத்தபெரு
மானதிட மென்பர்
மாடமலி சூளிகையி
லேறிமட வார்கள்
பாடலொலி செய்யமலி
கின்றபழு வூரே. 2

வாலிய புரத்திலவர்
வேவவிழி செய்த
போலிய வொருத்தர்புரி
நூலரிட மென்பர்
வேலியின் விரைக்கமல
மன்னமுக மாதர்
பாலென மிழற்றிநட
மாடுபழு வூரே. 3

எண்ணுமொ ரெழுத்துமிசை
யின்கிளவி தேர்வார்
கண்ணுமுத லாயகட
வுட்கிடம தென்பர்
மண்ணின்மிசை யாடிமலை
யாளர்தொழு தேத்திப்
பண்ணினொலி கொண்டுபயில்
கின்றபழு வூரே. 4

சாதல்புரி வார்சுடலை
தன்னில்நட மாடும்
நாதன்நமை யாளுடைய
நம்பனிட மென்பர்
வேதமொழி சொல்லிமறை
யாளரிறை வன்றன்
பாதமவை யேத்த நிகழ்
கின்றபழு வூரே. 5

மேவயரு மும்மதிலும்
வெந்தழல் விளைத்து
மாவயர அன்றுரிசெய்
மைந்தனிட மென்பர்
பூவையை மடந்தையர்கள்
கொண்டுபுகழ் சொல்லிப்
பாவையர்கள் கற்பொடு
பொலிந்தபழு வூரே. 6

மந்தண மிருந்துபுரி
மாமடிதன் வேள்வி
சிந்தவிளை யாடுசிவ
லோகனிட மென்பர்
அந்தணர்கள் ஆகுதியி
லிட்டஅகில் மட்டார்
பைந்தொடிநன் மாதர்சுவ
டொற்றுபழு வூரே. 7

உரக்கடல் விடத்தினை
மிடற்றிலுற வைத்தன்
றரக்கனை யடர்த்தருளும்
அப்பனிட மென்பர்
குரக்கினம் விரைப்பொழிலின்
மீதுகனி யுண்டு
பரக்குறு புனற்செய்விளை
யாடுபழு வூரே. 8

நின்றநெடு மாலுமொரு
நான்முகனும் நேட
அன்றுதழ லாய்நிமிரும்
ஆதியிட மென்பர்
ஒன்றுமிரு மூன்றுமொரு
நாலுமுணர் வார்கள்
மன்றினி லிருந்துடன்
மகிழ்ந்தபழு வூரே. 9

மொட்டையமண் ஆதர்துகில்
மூடுவிரி தேரர்
முட்டைகள் மொழிந்தமுனி
வான்றனிட மென்பர்
மட்டைமலி தாழைஇள
நீரதிசை பூகம்
பட்டையொடு தாறுவிரி
கின்றபழு வூரே. 10

அந்தணர்க ளானமலை
யாளரவ ரேத்தும்
பந்தமலி கின்றபழு
வூரரனை யாரச்
சந்தமிகு ஞானமுணர்
பந்தனுரை பேணி
வந்தவண மேத்துமவர்
வானமுடை யாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment