முற்றுணை யாயி பாடல் வரிகள் (murrunai yayi) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநனிபள்ளி – புஞ்சை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநனிபள்ளி – புஞ்சை
சுவாமி : நற்றுணையப்பர்
அம்பாள் : பர்வதராசபுத்திரி

முற்றுணை யாயி

முற்றுணை யாயி னானை
மூவர்க்கு முதல்வன் றன்னைச்
சொற்றுணை ஆயி னானைச்
சோதியை ஆத ரித்து
உற்றுணர்ந் துருகி யூறி
உள்கசி வுடைய வர்க்கு
நற்றுணை யாவர் போலும்
நனிபள்ளி அடிக ளாரே. 1

புலர்ந்தகால் பூவும் நீருங்
கொண்டடி போற்ற மாட்டா
வலஞ்செய்து வாயின் நூலால்
வட்டணைப் பந்தர் செய்த
சிலந்தியை அரைய னாக்கிச்
சீர்மைகள் அருள வல்லார்
நலந்திகழ் சோலை சூழ்ந்த
நனிபள்ளி அடிக ளாரே. 2

எண்பதும் பத்தும் ஆறு
மென்னுளே இருந்து மன்னிக்
கண்பழக் கொன்று மின்றிக்
கலக்கநான் அலக்க ழிந்தேன்
செண்பகந் திகழும் புன்னை
செழுந்திரட் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த
நனிபள்ளி அடிக ளாரே. 3

பண்ணினார் பாட லாகிப்
பழத்தினில் இரத மாகிக்
கண்ணினார் பார்வை யாகிக்
கருத்தொடு கற்ப மாகி
எண்ணினார் எண்ண மாகி
ஏழுல கனைத்து மாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார்
நனிபள்ளி அடிக ளாரே. 4

துஞ்சிருள் காலை மாலை
தொடர்ச்சியை மறந் திராதே
அஞ்செழுத் தோதின் நாளும்
அரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பால்சோ றாக்கி
வழக்கிலா அமணர் தந்த
நஞ்சமு தாக்கு வித்தார்
நனிபள்ளி அடிக ளாரே. 5

செம்மலர்க் கமலத் தோனுந்
திருமுடி காண மாட்டான்
அம்மலர்ப் பாதங் காண்பான்
ஆழியான் அகழ்ந்துங் காணான்
நின்மலன் என்றங் கேத்தும்
நினைப்பினை அருளி நாளும்
நம்மலம் அறுப்பர் போலும்
நனிபள்ளி அடிக ளாரே. 6

அரவத்தால் வரையைச் சுற்றி
அமரரோ டசுரர் கூடி
அரவித்துக் கடையத் தோன்றும்
ஆலநஞ் சமுதா வுண்டார்
விரவித்தம் அடிய ராகி
வீடிலாத் தொண்டர் தம்மை
நரகத்தில் வீழ வொட்டார்
நனிபள்ளி அடிக ளாரே. 7

மண்ணுளே திரியும் போது
வருவன பலவுங் குற்றம்
புண்ணுளே புரைபு ரையன்
புழுப்பொதி பொள்ள லாக்கை
—– —– —– —–

இப்பதிகத்தில் 8-ம் செய்யுளின் பின்னிரண்டடிகள் போயின. 8

இப்பதிகத்தில் 9-ம்செய்யுள் மறைந்து போயிற்று. 9

பத்துமோர் இரட்டி தோளான்
பாரித்து மலையெ டுக்கப்
பத்துமோர் இரட்டி தோள்கள்
படருடம் படர வூன்றிப்
பத்துவாய் கீதம் பாடப்
பரிந்தவற் கருள்கொ டுத்தார்
பத்தர்தாம் பரவி யேத்தும்
நனிபள்ளிப் பரம னாரே.

இத்தலம் சோழ நாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment