முறியுறு நிறமல்கு பாடல் வரிகள் (muriyuru niramalku) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருச்சேறை – உடையார்கோவில் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருச்சேறை – உடையார்கோவில்முறியுறு நிறமல்கு
முறியுறு நிறமல்கு முகிழ்முலை
மலைமகள் வெருவமுன்
வெறியுறு மதகரி யதள்பட
வுரிசெய்த விறலினர்
நறியுறும் இதழியின் மலரொடு
நதிமதி நகுதலை
செறியுறு சடைமுடி யடிகள்தம்
வளநகர் சேறையே. 1
புனமுடை நறுமலர் பலகொடு
தொழுவதொர் புரிவினர்
மனமுடை அடியவர் படுதுயர்
களைவதொர் வாய்மையர்
இனமுடை மணியினோ டரைசிலை
யொளிபெற மிளிர்வதோர்
சினமுதிர் விடையுடை யடிகள்தம்
வளநகர் சேறையே. 2
புரிதரு சடையினர் புலியதள்
அரையினர் பொடிபுல்கும்
எரிதரும் உருவினர் இடபம
தேறுவ ரீடுலா
வரிதரு வளையின ரவரவர்
மகிழ்தர மனைதொறுந்
திரிதரு சரிதையர் உறைதரு
வளநகர் சேறையே. 3
துடிபடும் இடையுடை மடவர
லுடனொரு பாகமா
இடிபடு குரலுடை விடையினர்
படமுடை யரவினர்
பொடிபடும் உருவினர் புலியுரி
பொலிதரும் அரையினர்
செடிபடு சடைமுடி யடிகள்தம்
வளநகர் சேறையே. 4
அந்தர முழிதரு திரிபுர
மொருநொடி யளவினில்
மந்தர வரிசிலை யதனிடை
யரவரி வாளியால்
வெந்தழி தரவெய்த விடலையர்
விடமணி மிடறினர்
செந்தழல் நிறமுடை யடிகள்தம்
வளநகர் சேறையே. 5
மத்தர முறுதிறன் மறவர்தம்
வடிவுகொ டுருவுடைப்
பத்தொரு பெயருடை விசயனை
அசைவுசெய் பரிசினால்
அத்திரம் அருளும்நம் அடிகள
தணிகிளர் மணியணி
சித்திர வளநகர் செறிபொழில்
தழுவிய சேறையே. 6
பாடினர் அருமறை முறைமுறை
பொருளென அருநடம்
ஆடினர் உலகிடை அலர்கொடும்
அடியவர் துதிசெய
வாடினர் படுதலை யிடுபலி
யதுகொடு மகிழ்தருஞ்
சேடர்தம் வளநகர் செறிபொழில்
தழுவிய சேறையே. 7
கட்டுர மதுகொடு கயிலைநல்
மலைநலி கரமுடை
நிட்டுரன் உடலொடு நெடுமுடி
யொருபதும் நெரிசெய்தார்
மட்டுர மலரடி யடியவர்
தொழுதெழ அருள்செயுஞ்
சிட்டர்தம் வளநகர் செறிபொழில்
தழுவிய சேறையே. 8
பன்றியர் பறவையர் பரிசுடை
வடிவொடு படர்தர
அன்றிய அவரவர் அடியொடு
முடியவை யறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி
நடுவெயொர் நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட அருளிய
அவர்நகர் சேறையே. 9
துகடுறு விரிதுகில் உடையவர்
அமணெனும் வடிவினர்
விகடம துறுசிறு மொழியவை
நலமில வினவிடல்
முகிழ்தரும் இளமதி யரவொடும்
அழகுற முதுநதி
திகழ்தரு சடைமுடி யடிகள்தம்
வளநகர் சேறையே. 10
கற்றநன் மறைபயில் அடியவர்
அடிதொழு கவினுறு
சிற்றிடை யவளொடு மிடமென
வுறைவதொர் சேறைமேற்
குற்றமில் புகலியுள் இகலறு
ஞானசம் பந்தன
சொற்றக வுறமொழி பவரழி
விலர்துயர் தீருமே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்