முரசதிர்ந் தெழுதரு பாடல் வரிகள் (muracatirn telutaru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமுதுகுன்றம் – விருத்தாசலம் தலம் நடுநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : நடுநாடு
தலம் : திருமுதுகுன்றம் – விருத்தாசலம்
சுவாமி : பழமலைநாதர்
அம்பாள் : பெரியநாயகி

முரசதிர்ந் தெழுதரு

முரசதிர்ந் தெழுதரு முதுகுன்ற மேவிய
பரசமர் படையுடை யீரே
பரசமர் படையுடை யீருமைப் பரவுவார்
அரசர்கள் உலகில்ஆ வாரே. 1

மொய்குழ லாளொடு முதுகுன்ற மேவிய
பையர வம்மசைத் தீரே
பையர வம்மசைத் தீருமைப் பாடுவார்
நைவிலர் நாடொறும் நலமே. 2

முழவமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
மழவிடை யதுவுடை யீரே
மழவிடை யதுவுடை யீருமை வாழ்த்துவார்
பழியொடு பகையிலர் தாமே. 3

முருகமர் பொழிலணி முதுகுன்ற மேவிய
உருவமர் சடைமுடி யீரே
உருவமர் சடைமுடி யீருமை யோதுவார்
திருவொடு தேசினர் தாமே. 4

இப்பதிகத்தில் 5ம் செய்யுள் மறைந்து போயின. 5

இப்பதிகத்தில் 6ம் செய்யுள் மறைந்து போயின. 6

இப்பதிகத்தில் 7ம் செய்யுள் மறைந்து போயின. 7

முத்தி தருமுயர் முதுகுன்ற மேவிய
பத்து முடியடர்த் தீரே
பத்து முடியடர்த் தீருமைப் பாடுவார்
சித்தநல் லவ்வடி யாரே. 8

முயன்றவர் அருள்பெறு முதுகுன்ற மேவியன்
றியன்றவ ரறிவரி யீரே
இயன்றவ ரறிவரி யீருமை யேத்துவார்
பயன்றலை நிற்பவர் தாமே. 9

மொட்டலர் பொழிலணி முதுகுன்ற மேவிய
கட்டமண் தேரைக்காய்ந் தீரே
கட்டமண் தேரைக்காய்ந் தீருமைக் கருதுவார்
சிட்டர்கள் சீர்பெறு வாரே. 10

மூடிய சோலைசூழ் முதுகுன்றத் தீசனை
நாடிய ஞானசம் பந்தன்
நாடிய ஞானசம் பந்தன செந்தமிழ்
பாடிய அவர்பழி யிலரே.

இப்பதிகத்தில்5,6,7-ம்செய்யுட்கள்மறைந்து போயின.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment