முன்னிய கலைப்பொருளும் பாடல் வரிகள் (munniya kalaipporulum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புகலி – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்புகலி – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

முன்னிய கலைப்பொருளும்

முன்னிய கலைப்பொருளும்
மூவுலகில் வாழ்வும்
பன்னிய வொருத்தர்பழ
வூர்வினவின் ஞாலந்
துன்னிஇமை யோர்கள்துதி
செய்துமுன் வணங்குஞ்
சென்னியர் விருப்புறு
திருப்புகலி யாமே. 1

வண்டிரை மதிச்சடை
மிலைத்தபுனல் சூடிப்
பண்டெரிகை யாடுபர
மன்பதிய தென்பர்
புண்டரிக வாசமது
வீசமலர்ச் சோலைத்
தெண்டிரை கடற்பொலி
திருப்புகலி யாமே. 2

பாவணவு சிந்தையவர்
பத்தரொடு கூடி
நாவணவும் அந்தணன்
விருப்பிடம தென்பர்
பூவணவு சோலையிருள்
மாலையெதிர் கூரத்
தேவண விழா வளர்
திருப்புகலி யாமே. 3

மைதவழும் மாமிடறன்
மாநடம தாடிக்
கைவளையி னாளொடு
கலந்தபதி யென்பர்
செய்பணி பெருத்தெழும்
உருத்திரர்கள் கூடித்
தெய்வம திணக்குறு
திருப்புகலி யாமே. 4

முன்னமிரு மூன்றுசம
யங்களவை யாகிப்
பின்னையருள் செய்தபிறை
யாளனுறை கோயில்
புன்னைய மலர்ப்பொழில்
களக்கினொளி காட்டச்
செந்நெல்வய லார்தரு
திருப்புகலி யாமே. 5

வங்கமலி யுங்கடல்
விடத்தினை நுகர்ந்த
அங்கணன் அருத்திசெய்
திருக்குமிட மென்பர்
கொங்கண வியன்பொழிலின்
மாசுபணி மூசத்
தெங்கணவு தேன்மலி
திருப்புகலி யாமே. 6

நல்குரவும் இன்பமும்
நலங்களவை யாகி
வல்வினைகள் தீர்த்தருளும்
மைந்தனிட மென்பர்
பல்குமடி யார்கள்படி
யாரஇசை பாடிச்
செல்வமறை யோருறை
திருப்புகலி யாமே. 7

பரப்புறு புகழ்ப்பெருமை
யாளன்வரை தன்னால்
அரக்கனை யடர்த்தருளும்
அண்ணலிட மென்பர்
நெருக்குறு கடல்திரைகண்
முத்தமணி சிந்தச்
செருக்குறு பொழிற்பொலி
திருப்புகலி யாமே. 8

கோடலொடு கூன்மதி
குலாயசடை தன்மேல்
ஆடரவம் வைத்தருளும்
அப்பன்இரு வர்க்கும்
நேடஎரி யாகிஇரு
பாலுமடி பேணித்
தேடவுறை யுந்நகர்
திருப்புகலி யாமே. 9

கற்றமண ருற்றுலவு
தேரருரை செய்த
குற்றமொழி கொள்கைய
திலாதபெரு மானூர்
பொற்றொடி மடந்தையரும்
மைந்தர்புல னைந்துஞ்
செற்றவர் விருப்புறு
திருப்புகலி யாமே. 10

செந்தமிழ் பரப்புறு
திருப்புகலி தன்மேல்
அந்தமுத லாகிநடு
வாயபெரு மானைப்
பந்தனுரை செந்தமிழ்கள்
பத்துமிசை கூர
வந்தவண மேத்துமவர்
வானமுடை யாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment