முளைக்கதிர் இளம்பிறை பாடல் வரிகள் (mulaikkatir ilampirai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவதிகைவீரட்டானம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : நடுநாடு
தலம் : திருவதிகைவீரட்டானம்
சுவாமி : வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : திரிபுரசுந்தரி
முளைக்கதிர் இளம்பிறை
முளைக்கதிர் இளம்பிறை
மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர்
மழலை வீணையர்
திளைத்ததோர் மான்மறிக்
கையர் செய்யபொன்
கிளைத்துழித் தோன்றிடுங்
கெடில வாணரே. 1
ஏறினர் ஏறினை
ஏழை தன்னொரு
கூறினர் கூறினர்
வேதம் அங்கமும்
ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங்
கீறின வுடையினர் கெடில வாணரே. 2
விடந்திகழ் கெழுதரு
மிடற்றர் வெள்ளைநீ
றுடம்பழ கெழுதுவர்
முழுதும் வெண்ணிலாப்
படர்ந்தழ கெழுதரு
சடையிற் பாய்புனல்
கிடந்தழ கெழுதிய
கெடில வாணரே. 3
விழுமணி அயிலெயிற்
றம்பு வெய்யதோர்
கொழுமணி நெடுவரை
கொளுவிக் கோட்டினார்
செழுமணி மிடற்றினர்
செய்யர் வெய்யதோர்
கெழுமணி அரவினர்
கெடில வாணரே. 4
குழுவினர் தொழுதெழும்
அடியர் மேல்வினை
தழுவின கழுவுவர்
பவள மேனியர்
மழுவினர் மான்மறிக்
கையர் மங்கையைக்
கெழுவின யோகினர்
கெடில வாணரே. 5
அங்கையில் அனலெரி
யேந்தி யாறெனும்
மங்கையைச் சடையிடை
மணப்பர் மால்வரை
நங்கையைப் பாகமு
நயப்பர் தென்றிசைக்
கெங்கைய தெனப்படுங்
கெடில வாணரே. 6
கழிந்தவர் தலைகல
னேந்திக் காடுறைந்
திழிந்தவ ரொருவரென்
றெள்க வாழ்பவர்
வழிந்திழி மதுகர
மிழற்ற மந்திகள்
கிழிந்ததேன் நுகர்தருங்
கெடில வாணரே. 7
கிடந்தபாம் பருகுகண்
டரிவை பேதுறக்
கிடந்தபாம் பவளையோர்
மயிலென் றையுறக்
கிடந்தநீர்ச் சடைமிசைப்
பிறையும் ஏங்கவே
கிடந்துதான் நகுதலைக்
கெடில வாணரே. 8
வெறியுறு விரிசடை
புரள வீசியோர்
பொறியுறு புலியுரி
யரைய தாகவும்
நெறியுறு குழலுமை
பாக மாகவுங்
கிறிபட உழிதர்வர்
கெடில வாணரே. 9
பூண்டதேர் அரக்கனைப்
பொருவில் மால்வரைத்
தூண்டுதோ ளவைபட
அடர்த்த தாளினார்
ஈண்டுநீர்க் கமலவாய்
மேதி பாய்தரக்
கீண்டுதேன் சொரிதருங்
கெடில வாணரே.
திருச்சிற்றம்பலம்