Sivan Songs

மெய்த்தானத் தகம்படியுள் பாடல் வரிகள் | meyttanat takampatiyul Thevaram song lyrics in tamil

மெய்த்தானத் தகம்படியுள் பாடல் வரிகள் (meyttanat takampatiyul) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநெய்தானம் – தில்லைஸ்தானம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருநெய்தானம் – தில்லைஸ்தானம்மெய்த்தானத் தகம்படியுள்

மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று
வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக்கூடாம்
இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்
இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே
மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்
வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய
நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 1

ஈண்டா விரும்பிறவித் துறவா ஆக்கை
இதுநீங்க லாம்விதியுண் டென்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்பக் கேள்நீ
விண்ணவர்தம் பெருமானார் மண்ணி லென்னை
ஆண்டானன் றருவரையாற் புரமூன் றெய்த
அம்மானை அரிஅயனும் காணா வண்ணம்
நீண்டா னுறைதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 2

பரவிப் பலபலவுந் தேடி யோடிப்
பாழாங் குரம்பையிடைக் கிடந்து வாளா
குரவிக் குடிவாழ்க்கை வாழ வெண்ணிக்
குலைகை தவிர்நெஞ்சே கூறக் கேள்நீ
இரவிக் குலமுதலா வானோர் கூடி
யெண்ணிறந்த கோடி யமர ராயம்
நிரவிக் கரியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமெ. 3

அலையார் வினைத்திறஞ்சே ராக்கை யுள்ளே
யகப்பட்டு ளாசையெனும் பாசந் தன்னுள்
தலையாய்க் கடையாகும் வாழ்வி லாழ்ந்து
தளர்ந்துமிக நெஞ்சமே அஞ்ச வேண்டா
இலையார் புனக்கொன்றை யெறிநீர்த் திங்கள்
இருஞ்சடைமேல் வைத்துகந்தான் இமையோரேத்தும்
நிலையா னுறைநிறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 4

தினைத்தனையோர் பொறையிலா வுயிர்போங் கூட்டைப்
பொருளென்று மிகவுன்னி மதியா லிந்த
அனைத்துலகும் ஆளலா மென்று பேசும்
ஆங்காரந் தவிர்நெஞ்சே யமரர்க் காக
முனைத்துவரு மதில்மூன்றும் பொன்ற அன்று
முடுகியவெஞ் சிலைவளைத்துச் செந்தீ மூழ்க
நினைத்தபெருங் கருணையன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 5

மிறைபடுமிவ் வுடல்வாழ்வை மெய்யென்றெண்ணி
வினையிலே கிடந்தழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவுடையார் மனத்துளான் குமரன் தாதை
கூத்தாடுங் குணமுடையான் கொலைவேற் கையான்
அறைகழலுந் திருவடிமேற் சிலம்பும் ஆர்ப்ப
அவனிதலம் பெயரவரு நட்டம் நின்ற
நிறைவுடையா னிடமாம்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 6

பேசப் பொருளலாப் பிறவி தன்னைப்
பெரிதென்றுன் சிறுமனத்தால் வேண்டி யீண்டு
வாசக் குழல்மடவார் போக மென்னும்
வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே
தூசக் கரியுரித்தான் தூநீ றாடித்
துதைந்திலங்கு நூல்மார்பன் தொடர கில்லா
நீசர்க் கரியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 7

அஞ்சப் புலனிவற்றா லாட்ட வாட்டுண்
டருநோய்க் கிடமாய வுடலின் தன்மை
தஞ்ச மெனக்கருதித் தாழேல் நெஞ்சே
தாழக் கருதுதியே தன்னைச் சேரா
வஞ்ச மனத்தவர்கள் காண வொண்ணா
மணிகண்டன் வானவர்தம் பிரானென் றேத்தும்
நெஞ்சர்க் கினியவன்நெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 8

பொருந்தாத உடலகத்திற் புக்க ஆவி
போமா றறிந்தறிந்தே புலைவாழ் வுன்னி
இருந்தாங் கிடர்ப்படநீ வேண்டா நெஞ்சே
யிமையவர்தம் பெருமானன் றுமையா ளஞ்சக்
கருந்தாள் மதகரியை வெருவச் சீறுங்
கண்ணுதல்கண் டமராடி கருதார் வேள்வி
நிரந்தரமா இனிதுறைநெய்த் தான மென்று
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 9

உரித்தன் றுனக்கிவ் வுடலின் தன்மை
உண்மை யுரைத்தேன் விரத மெல்லாந்
தரித்துந் தவமுயன்றும் வாழா நெஞ்சே
தம்மிடையி லில்லார்க்கொன் றல்லார்க் கன்னன்
எரித்தான் அனலுடையான் எண்டோ ளானே
யெம்பெருமா னென்றேத்தா இலங்கைக் கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவி னானை
நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment