மருவமர் குழலுமை பாடல் வரிகள் (maruvamar kulalumai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிசயமங்கை தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவிசயமங்கை
சுவாமி : விசயநாதேசுவரர்
அம்பாள் : மங்கைநாயகியம்மை

மருவமர் குழலுமை

மருவமர் குழலுமை
பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம்
அடிகள் கோயிலாங்
குரவமர் சுரபுன்னை
கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி
விசய மங்கையே. 1

கீதமுன் இசைதரக்
கிளரும் வீணையர்
பூதமுன் இயல்புடைப்
புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக்
குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு
விசய மங்கையே. 2

அக்கர வரையினர்
அரிவை பாகமாத்
தொக்கநல் விடையுடைச்
சோதி தொன்னகர்
தக்கநல் வானவர்
தலைவர் நாடொறும்
மிக்கவர் தொழுதெழு
விசய மங்கையே. 3

தொடைமலி இதழியுந்
துன்எ ருக்கொடு
புடைமலி சடைமுடி
யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர்
பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடியணல்
விசய மங்கையே. 4

தோடமர் காதினன்
துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோ
டினித மர்விடங்
காடமர் மாகரி
கதறப் போர்த்ததோர்
வேடம துடையணல்
விசய மங்கையே. 5

மைப்புரை கண்ணுமை
பங்கன் வண்டழல்
ஒப்புரை மேனியெம்
முடைய வன்னகர்
அப்பொடு மலர்கொடங்
கிறைஞ்சி வானவர்
மெய்ப்பட அருள்புரி
விசய மங்கையே. 6

இரும்பொனின் மலைவிலின்
எரிச ரத்தினால்
வரும்புரங் களைப்பொடி
செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையுந்
தூய மத்தமும்
விரும்பிய சடையணல்
விசய மங்கையே. 7

உளங்கையி லிருபதோ
டொருப துங்கொடாங்
களந்தரும் வரையெடுத்
திடும்அ ரக்கனைத்
தளர்ந்துடல் நெரிதர
அடர்த்த தன்மையன்
விளங்கிழை யொடும்புகும்
விசய மங்கையே. 8

மண்ணினை யுண்டவன்
மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்களப்
பரிய அத்தனூர்
தண்ணறுஞ் சாந்தமும்
பூவும் நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு
விசய மங்கையே. 9

கஞ்சியுங் கவளமுண்
கவணர் கட்டுரை
நஞ்சினுங் கொடியன
நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத்
தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு
விசய மங்கையே. 10

விண்ணவர் தொழுதெழு
விசய மங்கையை
நண்ணிய புகலியுள்
ஞான சம்பந்தன்
பண்ணிய செந்தமிழ்
பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி
புகுதல் திண்ணமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment