மருட்டுயர் தீரவன் பாடல் வரிகள் (maruttuyar tiravan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கடவூர் வீரட்டம் – திருக்கடவூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கடவூர் வீரட்டம் – திருக்கடவூர்
சுவாமி : அமிர்தகடேஸ்வரர்
அம்பாள் : அபிராமி

மருட்டுயர் தீரவன்

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த
மாணிமார்க் கண்டேயற்காய்
இருட்டிய மேனி வளைவாள்
எயிற்றெரி போலுங்குஞ்சிச்
சுருட்டிய நாவில்வெங் கூற்றம்
பதைப்ப வுதைத்துங்ஙனே
உருட்டிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே. 1

பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்
தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணிதன் இன்னுயிர்
உண்ண வெகுண்டடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு
திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட
வூருறை உத்தமனே. 2

கரப்புறு சிந்தையர் காண்டற்
கரியவன் காமனையும்
நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற்
கங்கையும் பொங்கரவும்
பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன்
காலனைப் பண்டொருகால்
உரப்பிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே. 3

மறித்திகழ் கையினன் வானவர்
கோனை மனமகிழ்ந்து
குறித்தெழு மாணிதன் ஆருயிர்
கொள்வான் கொதித்தசிந்தைக்
கறுத்தெழு மூவிலை வேலுடைக்
காலனைத் தானலற
உறுக்கிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே. 4

குழைத்திகழ் காதினன் வானவர்
கோனைக் குளிர்ந்தெழுந்து
பழக்கமொ டர்ச்சித்த மாணிதன்
ஆருயிர் கொள்ளவந்த
தழற்பொதி மூவிலை வேலுடைக்
காலனைத் தானலற
உழக்கிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே. 5

பாலனுக் காயன்று பாற்கடல்
ஈந்து பணைத்தெழுந்த
ஆலினிற் கீழிருந் தாரண
மோதி அருமுனிக்காய்ச்
சூலமும் பாசமுங் கொண்டு
தொடர்ந்தடர்ந் தோடிவந்த
காலனைக் காய்ந்த பிரான்கட
வூருறை உத்தமனே. 6

படர்சடைக் கொன்றையும் பன்னக
மாலை பணிகயிறா
உடைதலைக் கோத்துழல் மேனியன்
உண்பலிக் கென்றுழல்வோன்
சுடர்பொதி மூவிலை வேலுடைக்
காலனைத் துண்டமதா
உடறிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே. 7

வெண்டலை மாலையுங் கங்கைக்
கரோடி விரிசடைமேற்
பெண்டனி நாயகன் பேயுகந்
தாடும் பெருந்தகையான்
கண்டனி நெற்றியன் காலனைக்
காய்ந்து கடலின்விடம்
உண்டருள் செய்தபி ரான்கட
வூருறை உத்தமனே. 8

கேழல தாகிக் கிளறிய
கேசவன் காண்பரிதாய்
வாழிநன் மாமலர்க் கண்ணிடந்
திட்டவம் மாலவற்கன்
றாழியும் ஈந்து அடுதிறற்
காலனை அன்றடர்த்து
ஊழியு மாய பிரான்கட
வூருறை உத்தமனே. 9

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள
மாலை திருமுடிமேல்
ஆன்றிகழ் ஐந்துகந் தாடும்
பிரான்மலை ஆர்த்தெடுத்த
கூன்றிகழ் வாளரக் கன்முடி
பத்துங் குலைந்துவிழ
ஊன்றிய சேவடி யான்கட
வூருறை உத்தமனே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment