மானும்மரை இனமும்மயில் பாடல் வரிகள் (manum marai inamum mayil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பருப்பதம் – ஸ்ரீசைலம் தலம் வடநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : வடநாடு
தலம் : திருப்பருப்பதம் – ஸ்ரீசைலம்மானும்மரை இனமும்மயில்

மானும்மரை இனமும்மயில்
இனமுங்கலந் தெங்குந்
தாமேமிக மேய்ந்துதடஞ்
சுனைநீர்களைப் பருகிப்
பூமாமரம் உரிஞ்சிப்பொழி
லூடேசென்று புக்குத்
தேமாம்பொழில் நீழல்துயில்
சீபர்ப்பத மலையே. 1

மலைச்சாரலும் பொழிற்சாரலும்
புறமேவரும் இனங்கள்
மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட
மலங்கித்தன களிற்றை
அழைத்தோடியும் பிளிறீயவை
அலமந்துவந் தெய்த்துத்
திகைத்தோடித்தன் பிடிதேடிடுஞ்
சீபர்ப்பத மலையே. 2

மன்னிப்புனங் காவல்மட
மொழியாள்புனங் காக்கக்
கன்னிக்கிளி வந்துகவைக்
கோலிக்கதிர் கொய்ய
என்னைக்கிளி மதியாதென்று
எடுத்துக்கவண் ஒலிப்பத்
தென்னற்கிளி திரிந்தேறிய
சீபர்ப்பத மலையே. 3

மையார்தடங் கண்ணாள்மட
மொழியாள்புனங் காக்கச்
செவ்வேதிரிந் தாயோவெனப்
போகாவிட விளிந்து
கைபாவிய கவணால்மணி
எறியஇரிந் தோடிச்
செவ்வாயன கிளிபாடிடுஞ்
சீபர்ப்பத மலையே. 4

ஆனைக்குலம் இரிந்தோடித்தன்
பிடிசூழலிற் றிரியத்
தானப்பிடி செவிதாழ்த்திட
அதற்குமிக இரங்கி
மானக்குற அடல்வேடர்கள்
இலையாற்கலை கோலித்
தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ்
சீபர்ப்பத மலையே. 5

மாற்றுக்களி றடைந்தாயென்று
மதவேழங்கை யெடுத்து
மூற்றித்தழல் உமிழ்ந்தும்மதம்
பொழிந்தும்முகஞ் சுழியத்
தூற்றத்தரிக் கில்லேனென்று
சொல்லிஅயல் அறியத்
தேற்றிச்சென்று பிடிசூளறுஞ்
சீபர்ப்பத மலையே. 6

அப்போதுவந் துண்டீர்களுக்
கழையாதுமுன் னிருந்தேன்
எப்போதும்வந் துண்டாலெமை
எமர்கள்சுழி யாரோ
இப்போதுமக் கிதுவேதொழில்
என்றோடியக் கிளியைச்
செப்பேந்திள முலையாள்எறி
சீபர்ப்பத மலையே. 7

திரியும்புரம் நீறாக்கிய
செல்வன்றன கழலை
அரியதிரு மாலோடயன்
றானும்மவர் அறியார்
கரியின்னினம் ஓடும்பிடி
தேனுண்டவை களித்துத்
திரிதந்தவை திகழ்வாற்பொலி
சீபர்ப்பத மலையே. 8

ஏனத்திரள் கிளைக்கஎரி
போலமணி சிதற
ஏனல்லவை மலைச்சாரலிற்
றிரியுங்கர டீயும்
மானும்மரை இனமும்மயில்
மற்றும்பல வெல்லாந்
தேனுண்பொழில் சோலைமிகு
சீபர்ப்பத மலையே. 9

நல்லாரவர் பலர்வாழ்தரு
வயல்நாவல வூரன்
செல்லல்லுற அரியசிவன்
சீபர்ப்பத மலையை
அல்லலவை தீரச்சொன
தமிழ்மாலைகள் வல்லார்
ஒல்லைச்செல உயர்வானகம்
ஆண்டங்கிருப் பாரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment