மந்திர மறையவை பாடல் வரிகள் (mantira maraiyavai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவெண்காடு தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவெண்காடு
சுவாமி : சுவேதாரண்யேஸ்வரர்
அம்பாள் : பிரமவித்யாநாயகி

மந்திர மறையவை

மந்திர மறையவை
வான வரொடும்
இந்திரன் வழிபட
நின்ற எம்மிறை
வெந்தவெண் ணீற்றர்வெண்
காடு மேவிய
அந்தமு முதலுடை
அடிக ளல்லரே. 1

படையுடை மழுவினர்
பாய்புலித் தோலின்
உடைவிரி கோவணம்
உகந்த கொள்கையர்
விடையுடைக் கொடியர்வெண்
காடு மேவிய
சடையிடைப் புனல்வைத்த
சதுர ரல்லரே. 2

பாலொடு நெய்தயிர்
பலவு மாடுவர்
தோலொடு நூலிழை
துதைந்த மார்பினர்
மேலவர் பரவுவெண்
காடு மேவிய
ஆலம தமர்ந்தஎம்
அடிக ளல்லரே. 3

ஞாழலுஞ் செருந்தியும்
நறுமலர்ப் புன்னையுந்
தாழைவெண் குருகயல்
தயங்கு கானலில்
வேழம துரித்தவெண்
காடு மேவிய
யாழின திசையுடை
இறைவ ரல்லரே. 4

பூதங்கள் பலவுடைப்
புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பலஇடர்
தீர்க்கும் எம்மிறை
வேதங்கள் முதல்வர்வெண்
காடு மேவிய
பாதங்கள் தொழநின்ற
பரம ரல்லரே. 5

மண்ணவர் விண்ணவர்
வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள்
இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில்கொள்வெண்
காடு மேவிய
அண்ணலை அடிதொழ
அல்ல லில்லையே. 6

நயந்தவர்க் கருள்பல
நல்கி இந்திரன்
கயந்திரம் வழிபட
நின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவுவெண்
காடு மேவிய
பயந்தரு மழுவுடைப்
பரம ரல்லரே. 7

மலையுடன் எடுத்தவல்
லரக்கன் நீள்முடி
தலையுடன் நெரித்தருள்
செய்த சங்கரர்
விலையுடை நீற்றர்வெண்
காடு மேவிய
அலையுடைப் புனல்வைத்த
அடிக ளல்லரே. 8

ஏடவிழ் நறுமலர்
அயனும் மாலுமாய்த்
தேடவுந் தெரிந்தவர்
தேர கிற்கிலார்
வேடம துடையவெண்
காடு மேவிய
ஆடலை யமர்ந்தஎம்
அடிக ளல்லரே. 9

போதியர் பிண்டியர்
பொருத்த மில்லிகள்
நீதிகள் சொல்லியும்
நினைய கிற்கிலார்
வேதியர் பரவுவெண்
காடு மேவிய
ஆதியை யடிதொழ
அல்ல லில்லையே. 10

நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எஞ் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment