மனமார்தரு மடவாரொடு பாடல் வரிகள் (manamartaru matavarotu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் இடும்பாவனம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : இடும்பாவனம்
சுவாமி : சற்குணேஸ்வரர்
அம்பாள் : மங்களவல்லி

மனமார்தரு மடவாரொடு

மனமார்தரு மடவாரொடு
மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனமார்தரு சங்கக்கடல்
வங்கத்திர ளுந்திச்
சினமார்தரு திறல்வாளெயிற்
றரக்கன்மிகு குன்றில்
இனமாதவர் இறைவர்க்கிடம்
இடும்பாவன மிதுவே. 1

மலையார்தரு மடவாளொரு
பாகம்மகிழ் வெய்தி
நிலையார்தரு நிமலன்வலி
நிலவும்புக ழொளிசேர்
கலையார்தரு புலவோரவர்
காவல்மிகு குன்றில்
இலையார்தரு பொழில்சூழ்தரும்
இடும்பாவன மிதுவே. 2

சீலம்மிகு சித்தத்தவர்
சிந்தித்தெழும்1 எந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரும்
உலகத்தவர் நலமார்
கோலம்மிகு மலர்மென்முலை
மடவார்மிகு குன்றில்
ஏலங்கமழ் பொழில்சூழ்தரும்
இடும்பாவன மிதுவே.

பாடம் : 1 சித்தரவர் சிந்தித்தொழும் 3

பொழிலார்தரு குலைவாழைகள்
எழிலார்திகழ் போழ்தில்
தொழிலான்மிகு தொண்டரவர்
தொழுதாடிய முன்றில்
குழலார்தரு மலர்மென்முலை
மடவார்மிகு குன்றில்
எழிலார்தரும் இறைவர்க்கிடம்
இடும்பாவன மிதுவே. 4

பந்தார்விரல் உமையாளொரு
பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய
செழுநீர்வயற் கரைமேல்
கொந்தார்மலர் புன்னைமகிழ்
குரவங்கமழ் குன்றில்
எந்தாயென இருந்தானிடம்
இடும்பாவன மிதுவே. 5

நெறிநீர்மையர் நீள்வானவர்
நினையுந்நினை வாகி
அறிநீர்மையி லெய்தும்மவர்க்
கறியும்மறி வருளிக்
குறிநீர்மையர் குணமார்தரு2
மணமார்தரு குன்றில்
எறிநீர்வயல் புடைசூழ்தரும்
இடும்பாவன மிதுவே.

பாடம் : 2 குளமார்தரு 6

நீறேறிய திருமேனியர்
நிலவும்முல கெல்லாம்
பாறேறிய படுவெண்டலை
கையிற்பலி வாங்காக்3
கூறேறிய மடவாளொரு
பாகம்மகிழ் வெய்தி
ஏறேறிய இறைவர்க்கிடம்
இடும்பாவன மிதுவே.

பாடம் : 3 பாங்காய்க் 7

தேரார்தரு திகழ்வாளெயிற்
றரக்கன்சிவன் மலையை
ஓராதெடுத் தார்த்தான்முடி
யொருபஃதவை நெரித்துக்
கூரார்தரு கொலைவாளொடு
குணநாமமுங் கொடுத்த
ஏரார்தரும் இறைவர்க்கிடம்
இடும்பாவன மிதுவே. 8

பொருளார்தரு மறையோர்புகழ்
விருத்தர்பொலி மலிசீர்த்
தெருளார்தரு சிந்தையொடு
சந்தம்மலர் பலதூய்
மருளார்தரு மாயன்னயன்
காணார்மய லெய்த
இருளார்தரு கண்டர்க்கிடம்
இடும்பாவன மிதுவே. 9

தடுக்கையுடன் இடுக்கித்தலை
பறித்துச்சமண் நடப்பர்
உடுக்கைபல துவர்க்கூறைகள்
உடம்பிட்டுழல் வாரும்
மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல்
மலிநீர்மலர்க் கரைமேல்
இடுக்கண்பல களைவானிடம்
இடும்பாவன மிதுவே. 10

கொடியார்நெடு மாடக்குன்ற
ளூரிற்கரைக் கோல
இடியார்கட லடிவீழ்தரும்
இடும்பாவனத் திறையை
அடியாயுமந் தணர்காழியுள்
அணிஞானசம் பந்தன்
படியாற்சொன்ன4 பாடல்சொலப்
பறையும்வினை தானே.

பாடம் : 4 படியார்சொன்ன

திருச்சிற்றம்பலம்

Leave a Comment