மாலினை மாலுற பாடல் வரிகள் (malinai malura) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பூந்துருத்தி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்பூந்துருத்தி
சுவாமி : புஷ்பவனேஸ்வரர்
அம்பாள் : சௌந்தரநாயகி

மாலினை மாலுற

மாலினை மாலுற நின்றான்
மலைமகள் தன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப்
பண்புண ரார்மதின்மேற்
போலனைப் போர்விடை யேறியைப்
பூந்துருத் திமகிழும்
ஆலனை ஆதிபு ராணனை
நானடி போற்றுவதே. 1

மறியுடை யான்மழு வாளினன்
மாமலை மங்கையோர்பால்
குறியுடை யான்குண மொன்றறிந்
தாரில்லை கூறிலவன்
பொறியுடை வாளர வத்தவன்
பூந்துருத் தியுறையும்
அறிவுடை ஆதி புராணனை
நானடி போற்றுவதே. 2

மறுத்தவர் மும்மதில் மாயவொர்
வெஞ்சிலை கோத்தோரம்பால்
அறுத்தனை ஆலதன் கீழனை
ஆல்விட முண்டதனைப்
பொறுத்தனைப் பூதப் படையனைப்
பூந்துருத் தியுறையும்
நிறத்தனை நீல மிடற்றனை
யானடி போற்றுவதே. 3

உருவினை ஊழி முதல்வனை
ஓதி நிறைந்துநின்ற
திருவினைத் தேசம் படைத்தனைச்
சென்றடைந் தேனுடைய
பொருவினை யெல்லாந் துரந்தனைப்
பூந்துருத் தியுறையுங்
கருவினைக் கண்மூன் றுடையனை
யானடி போற்றுவதே. 4

தக்கன்றன் வேள்வி தகர்த்தவன்
சார மதுவன்றுகோள்
மிக்கன மும்மதில் வீயவோர்
வெஞ்சிலை கோத்தொரம்பால்
புக்கனன் பொன்றிகழ்ந் தன்னதோர்
பூந்துருத் தியுறையும்
நக்கனை நங்கள் பிரான்றனை
நானடி போற்றுவதே. 5

அருகடை மாலையுந் தானுடை
யான்அழ காலமைந்த
உருவுடை மங்கையுந் தன்னொரு
பாலுல காயுநின்றான்
பொருபடை வேலினன் வில்லினன்
பூந்துருத் தியுறையுந்
திருவுடைத் தேச மதியனை
யானடி போற்றுவதே. 6

மன்றியுந் நின்ற மதிலரை
மாய வகைகெடுக்கக்
கன்றியுந் நின்று கடுஞ்சிலை
வாங்கிக் கனலம்பினாற்
பொன்றியும் போகப் புரட்டினன்
பூந்துருத் தியுறையும்
அன்றியுஞ் செய்த பிரான்றனை
யானடி போற்றுவதே. 7

மின்னிறம் மிக்க இடையுமை
நங்கையொர் பான்மகிழ்ந்தான்
என்னிற மென்றம ரர்பெரி
யாரின்னந் தாமறியார்
பொன்னிற மிக்க சடையவன்
பூந்துருத் தியுறையும்
என்னிற வெந்தை பிரான்றனை
யானடி போற்றுவதே. 8

அந்தியை நல்ல மதியினை
யார்க்கும் அறிவரிய
செந்தியை வாட்டுஞ்செம் பொன்னினை
சென்றடைந் தேனுடைய
புந்தியைப் புக்க அறிவினை
பூந்துருத் தியுறையும்
நந்தியை நங்கள் பிரான்றனை
நானடி போற்றுவதே. 9

பைக்கையும் பாந்தி விழிக்கையும்
பாம்பு சடையிடையே
வைக்கையும் வானிழி கங்கையும்
மங்கை நடுக்குறவே
மொய்க்கை அரக்கனை யூன்றினன்
பூந்துருத் தியுறையும்
மிக்கநல் வேத விகிர்தனை
நானடி போற்றுவதே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment