Friday, February 13, 2026
HomeSivan Songsகுருகாம் வயிரமாங் கூறு பாடல் வரிகள் | kurukam vayiraman kuru Thevaram song lyrics...

குருகாம் வயிரமாங் கூறு பாடல் வரிகள் | kurukam vayiraman kuru Thevaram song lyrics in tamil

குருகாம் வயிரமாங் கூறு பாடல் வரிகள் (kurukam vayiraman kuru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கருகாவூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கருகாவூர்
சுவாமி : முல்லைவனேஸ்வரர்
அம்பாள் : கரும்பனையாளம்மை

குருகாம் வயிரமாங் கூறு

குருகாம் வயிரமாங் கூறு நாளாங்
கொள்ளுங் கிழமையாங் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம்
ஒருகா லுமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற் குரையா டியாங்
கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 1

வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டு முருவமாம் விரும்பி நின்ற
பத்தா மடியார்க்கோர் பாங்க னுமாம்
பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாந்
தொத்தா மமரர்கணஞ் சூழ்ந்து போற்றத்
தோன்றாதென் னுள்ளத்தி னுள்ளே நின்ற
கத்தாம் அடியேற்குக் காணா காட்டுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 2

பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம்
பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங்
கொண்ட சமயத்தார் தேவ னாகி
ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம்
ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று
காத்தானாங் காலன் அடையா வண்ணங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 3

இரவனாம் எல்லி நடமா டியாம்
எண்டிசைக்குந் தேவனாம் என்னு ளானாம்
அரவனாம் அல்லல் அறுப்பா னுமாம்
ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறுங்
குரவனாங் கூற்றை யுதைத்தான் றானாங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்
கரவனாங் காட்சிக் கெளியா னுமாங்
கண்ணாங் கருவூ ரெந்தை தானே. 4

படைத்தானாம் பாரை யிடந்தா னாகும்
பரிசொன் றறியாமை நின்றான் றானாம்
உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று
அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாகம்
அசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகுங்
கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 5

மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம்
மூவாத மேனிமுக் கண்ணி னானாஞ்
சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ்
செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம்
மாலனாம் மங்கையோர் பங்க னாகும்
மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாங்
காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 6

அரைசே ரரவனாம் ஆலத் தானாம்
ஆதிரை நாளானாம் அண்ட வானோர்
திரைசேர் திருமுடித் திங்க ளானாந்
தீவினை நாசனென் சிந்தை யானாம்
உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம்
உமையாளோர் பாகனாம் ஓத வேலிக்
கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 7

துடியாந் துடியின் முழக்கந் தானாஞ்
சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம்
படிதானாம் பாவ மறுப்பா னாகும்
பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாங்
கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங்
கூறாத வஞ்சக் குயலர்க் கென்றுங்
கடியானாங் காட்சிக் கரியா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 8

விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம்
விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம்
பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம்
பலபலவும் பாணி பயின்றான் றானாம்
எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம்
என்னுச்சி மேலானாம் எம்பி ரானாங்
கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 9

பொறுத்திருந்த புள்ளூர்வான் உள்ளா னாகி
உள்ளிருந்தங் குள்நோய் களைவான் றானாய்ச்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச்
சிலைகுனியத் தீமூட்டுந் திண்மை யானாம்
அறுத்திருந்த கையானாம் அந்தார் அல்லி
இருந்தானை ஒருதலையைத் தெரிய நோக்கிக்
கறுத்திருந்த கண்ட முடையான் போலுங்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. 10

ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும்
ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து
இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும்
இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும்
அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே
ஆகாய மந்திரமு மானா னாகுங்
கறுத்தானாங் காலனைக் காலால் வீழக்
கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே.

திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments