குழல்வலங் கொண்ட பாடல் வரிகள் (kulalvalan konta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்
சுவாமி : புற்றிடங்கொண்டார்
அம்பாள் : அல்லியம்பூங்கோதை
குழல்வலங் கொண்ட
குழல்வலங் கொண்ட சொல்லாள்
கோலவேற் கண்ணி தன்னைக்
கழல்வலங் கொண்டு நீங்காக்
கணங்களக் கணங்க ளார
அழல்வலங் கொண்ட கையான்
அருட்கதிர் எறிக்கும் ஆரூர்
தொழல்வலங் கொண்டல் செய்வான்
தோன்றினார் தோன்றி னாரே. 1
நாகத்தை நங்கை அஞ்ச
நங்கையை மஞ்ஞை யென்று
வேகத்தைத் தவிர நாகம்
வேழத்தின் உரிவை போர்த்துப்
பாகத்தின் நிமிர்தல் செய்யாத்
திங்களை மின்னென் றஞ்சி
ஆகத்திற் கிடந்த நாகம்
அடங்கும்ஆ ரூர னார்க்கே. 2
தொழுதகங் குழைய மேவித்
தொட்டிமை யுடைய தொண்டர்
அழுதகம் புகுந்து நின்றார்
அவரவர் போலும் ஆரூர்
எழிலக நடுவெண் முத்த
மன்றியும் ஏர்கொள் வேலிப்
பொழிலகம் விளங்கு திங்கட்
புதுமுகிழ் சூடி னாரே. 3
நஞ்சிருள் மணிகொள் கண்டர்
நகையிருள் ஈமக் கங்குல்
வெஞ்சுடர் விளக்கத் தாடி
விளங்கினார் போலும் மூவா
வெஞ்சுடர் முகடு தீண்டி
வெள்ளிநா ராச மன்ன
அஞ்சுடர் அணிவெண் டிங்கள்
அணியும்ஆ ரூர னாரே. 4
எந்தளிர் நீர்மை கோல
மேனியென் றிமையோ ரேத்தப்
பைந்தளிர்க் கொம்ப ரன்ன
படர்கொடி பயிலப் பட்டுத்
தஞ்சடைத் தொத்தி னாலுந்
தம்மதோர் நீர்மை யாலும்
அந்தளிர் ஆகம் போலும்
வடிவர்ஆ ரூர னாரே. 5
வானகம் விளங்க மல்கும்
வளங்கெழு மதியஞ் சூடித்
தானக மழிய வந்து
தாம்பலி தேர்வர் போலும்
ஊனகங் கழிந்த ஓட்டில்
உண்பதும் ஒளிகொள் நஞ்சம்
ஆனகம் அஞ்சும் ஆடும்
அடிகள்ஆ ரூர னாரே. 6
அஞ்சணை கணையி னானை
அழலுற அன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை
அமுதமா அணைந்து நக்கு
அஞ்சணை அஞ்சும் ஆடி
ஆடர வாட்டு வார்தாம்
அஞ்சணை வேலி ஆரூர்
ஆதரித் திடங்கொண் டாரே. 7
வணங்கிமுன் அமரர் ஏத்த
வல்வினை யான தீரப்
பிணங்குடைச் சடையில் வைத்த
பிறையுடைப் பெருமை யண்ணல்
மணங்கம ழோதி பாகர்
மதிநிலா வட்டத் தாடி
அணங்கொடி மாட வீதி
ஆரூரெம் அடிக ளாரே. 8
நகலிடம் பிறர்கட் காக
நான்மறை யோர்கள் தங்கள்
புகலிட மாகி வாழும்
புகலிலி இருவர் கூடி
இகலிட மாக நீண்டங்
கீண்டெழில் அழல தாகி
அகலிடம் பரவி யேத்த
அடிகள்ஆ ரூர னாரே. 9
ஆயிரந் திங்கள் மொய்த்த
அலைகடல் அமுதம் வாங்கி
ஆயிரம் அசுரர் வாழும்
அணிமதில் மூன்றும் வேவ
ஆயிரந் தோளும் மட்டித்
தாடிய அசைவு தீர
ஆயிரம் அடியும் வைத்த
அடிகள்ஆ ரூர னாரே.
திருச்சிற்றம்பலம்