கூனல்திங்கட் பாடல் வரிகள் (kunaltinkat) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் நாகைக்காரோணம் – நாகப்பட்டினம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : நாகைக்காரோணம் – நாகப்பட்டினம்
சுவாமி : காயாரோகணேஸ்வரர்
அம்பாள் : கருந்தடங்கண்ணி

கூனல்திங்கட்

கூனல்திங்கட் குறுங்கண்ணி
கான்றந்நெடு வெண்ணிலா
ஏனற்பூத்தம் மராங்கோதை
யோடும்விரா வுஞ்சடை
வானநாடன் அமரர் பெரு
மாற்கிட மாவது
கானல்வேலி கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 1

விலங்கலொன்று சிலையாமதில்
மூன்றுடன் வீட்டினான்
இலங்குகண்டத் தெழிலாமை
பூண்டாற் கிடமாவது
மலங்கியோங்கிவ் வருவெண்டிரை
மல்கிய மால்கடல்
கலங்கலோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 2

வெறிகொளாருங் கடற்கைதை
நெய்தல்விரி பூம்பொழில்
முறிகொள்ஞாழல் முடப்புன்னை
முல்லைம்முகை வெண்மலர்
நறைகொள்கொன்றைந் நயந்தோங்கும்
நாதற் கிடமாவது
கறைகொளோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 3

வண்டுபாடவ் வளர்கொன்றை
மாலைம்மதி யோடுடன்
கொண்டகோலங் குளிர்கங்கை
தங்குங்குருள் குஞ்சியுள்
உண்டுபோலும் மெனவைத்து
கந்தவ்வொரு வற்கிடம்
கண்டல்வேலி கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 4

வார்கொள்கோலம் முலைமங்கை
நல்லார்மகிழ்ந் தேத்தவே
நீர்கொள்கோலச் சடைநெடு
வெண்டிங்கள் நிகழ்வெய்தவே
போர்கொள்சூலப் படைபுல்கு
கையார்க் கிடமாவது
கார்கொளோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 5

விடையதேறிவ் விடவர
வசைத்தவ் விகிர்தரவர்
படைகொள்பூதம் பலபாட
ஆடும்பர மாயவர்
உடைகொள்வேங்கை யுரிதோ
லுடையார்க் கிடமாவது
கடைகொள்செல்வங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 6

பொய்துவாழ்வார் மனம்பாழ்
படுக்கும் மலர்ப்பூசனை
செய்துவாழ்வார் சிவன்சேவடிக்
கேசெலுஞ் சிந்தையார்
எய்தவாழ்வார் எழில்நக்க
ரெம்மாற் கிடமாவது
கைதல்வேலி கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 7

பத்திரட்டி திரள்தோ
ளுடையான் முடிபத்திற
அத்திரட்டி விரலால்
அடர்த்தார்க் கிடமாவது
மைத்திரட்டிவ் வருவெண்
டிரைமல்கிய வார்கடல்
கைத்திரட்டும் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 8

நல்லபோதில் லுறைவானும்
மாலுந்நடுக் கத்தினால்
அல்லராவ ரெனநின்ற
பெம்மாற் கிடமாவது
மல்லலோங்கிவ் வருவெண்டிரை
மல்கிய மாகடல்
கல்லலோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 9

உயர்ந்தபோதின் னுருவத்
துடைவிட் டுழல்வார்களும்
பெயர்ந்தமண்டை யிடுபிண்ட
மாவுண் டுழல்வார்களும்
நயந்துகாணா வகைநின்ற
நாதர்க் கிடமாவது
கயங்கொளோதங் கழிசூழ்
கடல்நாகைக் காரோணமே. 10

மல்குதண்பூம் புனல்வாய்ந்
தொழுகும்வயற் காழியான்
நல்லகேள்வித் தமிழ்ஞான
சம்பந்தன் நல்லார்கள்முன்
வல்லவாறே புனைந்தேத்துங்
காரோணத்து வண்டமிழ்
சொல்லுவார்க்கும் இவைகேட்ப
வர்க்குந்துய ரில்லையே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment