கோடல் கோங்கங் பாடல் வரிகள் (kotal konkan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : ஐயாறப்பர்
அம்பாள் : அறம்வளர்த்த நாயகி

கோடல் கோங்கங்

கோடல் கோங்கங் குளிர்கூ
விளமாலை குலாயசீர்
ஓடு கங்கை ஒளிவெண்
பிறைசூடும் ஒருவனார்
பாடல் வீணைமுழ வங்குழன்
மொந்தைபண் ணாகவே
ஆடு மாறுவல் லானும்
ஐயாறுடை ஐயனே. 1

தன்மை யாரும் அறிவாரில்லை
தாம்பிறர் எள்கவே
பின்னு முன்னுஞ் சிலபேய்க்
கணஞ்சூழத் திரிதர்வர்
துன்ன ஆடை யுடுப்பர்
சுடலைப்பொடிப் பூசுவர்
அன்னம் ஆலுந் துறையானும்
ஐயாறுடை ஐயனே. 2

கூறு பெண்ணுடை கோவணம்
உண்பதும் வெண்டலை
மாறி லாருங்கொள் வாரிலை
மார்பி லணிகலம்
ஏறும் ஏறித் திரிவரிமை
யோர்தொழு தேத்தவே
ஆறும் நான்குஞ்சொன் னானும்
ஐயாறுடை ஐயனே. 3

பண்ணின் நல்ல மொழியார்
பவளத்துவர் வாயினார்
எண்ணின் நல்ல குணத்தாரிணை
வேல்வென்ற கண்ணினார்
வண்ணம் பாடிவலி பாடித்தம்
வாய்மொழி பாடவே
அண்ணல் கேட்டுகந் தானும்
ஐயாறுடை ஐயனே. 4

வேன லானை வெருவவுரி
போர்த்துமை யஞ்சவே
வானை யூடறுக் கும்மதி
சூடிய மைந்தனார்
தேன்நெய் பால்தயிர் தெங்கிள
நீர்கரும் பின்தெளி
ஆனஞ் சாடும் முடியானும்
ஐயாறுடை ஐயனே. 5

எங்கு மாகிநின் றானும்
இயல்பறி யப்படா
மங்கை பாகங்கொண் டானும்
மதிசூடு மைந்தனும்
பங்க மில்பதி னெட்டொடு
நான்குக் குணர்வுமாய்
அங்கம் ஆறுஞ்சொன் னானும்
ஐயாறுடை ஐயனே. 6

ஓதி யாருமறி வாரிலை
யோதி யுலகெலாம்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச்
சோதியுட் சோதியான்
வேதியாகிவிண் ணாகிமண்
ணோடெரி காற்றுமாய்
ஆதி யாகி நின்றானும்
ஐயாறுடை ஐயனே. 7

குரவ நாண்மலர் கொண்டடி
யார்வழி பாடுசெய்
விரவி நீறணி வார்சில
தொண்டர் வியப்பவே.
பரவி நாடொறும் பாடநம்
பாவம் பறைதலால்
அரவ மார்த்துகந் தானும்
ஐயாறுடை ஐயனே. 8

உரைசெய் தொல்வழி செய்தறி
யாஇலங் கைக்குமன்
வரைசெய் தோளடர்த் தும்மதி
சூடிய மைந்தனார்
கரைசெய் காவிரி யின்வட
பாலது காதலான்
அரைசெய் மேகலை யானும்
ஐயாறுடை ஐயனே. 9

மாலுஞ் சோதி மலரானும்
அறிகிலா வாய்மையான்
காலங் காம்பு வயிரங்
கடிகையன் பொற்கழல்
கோல மாய்க்கொழுந் தீன்று
பவளந் திரண்டதோர்
ஆல நீழ லுளானும்
ஐயாறுடை ஐயனே. 10

கையி லுண்டுழல் வாருங்
கமழ்துவ ராடையால்
மெய்யைப் போர்த்துழல் வாரும்
உரைப்பன மெய்யல
மைகொள் கண்டத் தெண்டோள்
முக்கணான் கழல் வாழ்த்தவே
ஐயந் தேர்ந்தளிப் பானும்
ஐயாறுடை ஐயனே. 11

பலிதி ரிந்துழல் பண்டங்கன்
மேயஐ யாற்றினைக்
கலிக டிந்தகை யான்கடற்
காழியர் காவலன்
ஒலிகொள் சம்பந்தன் ஒண்டமிழ்
பத்தும்வல் லார்கள்போய்
மலிகொள் விண்ணிடை மன்னிய
சீர்பெறு வார்களே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment