காடுபயில் வீடுமுடை யோடுகலன் பாடல் வரிகள் (katupayil vitumutai yotukalan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் தேவூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : தேவூர்காடுபயில் வீடுமுடை யோடுகலன்

காடுபயில் வீடுமுடை யோடுகலன்
மூடுமுடை யாடைபுலிதோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு
வேதியர் திருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடவரி
கோடல்கைம்ம றிப்பநலமார்
சேடுமிகு பேடையனம் ஊடிமகிழ்
மாடமிடை தேவூரதுவே. 1

கோளரவு கொன்றைநகு வெண்டலையெ
ருக்குவனி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு
செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள்
குங்குமம்வி ரைக்குமணமார்
தேளரவு தென்றல்தெரு வெங்கும்நிறை
வொன்றிவரு தேவூரதுவே. 2

பண்தடவு சொல்லின்மலை வல்லியுமை
பங்கன்எமை யாளும்இறைவன்
எண்தடவு வானவரி றைஞ்சுகழ
லோன்இனிதி ருந்தஇடமாம்
விண்தடவு வார்பொழிலு குத்தநற
வாடிமலர் சூடிவிரையார்
*செண்தடவு மாளிகைசெ றிந்துதிரு
வொன்றிவளர் தேவூரதுவே.

(* சேண் என்பது செண் எனக் குறுகிநின்றது. ) 3

மாசில்மனம் நேசர்தம தாசைவளர்
சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி ஆடிமிகு
பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமும்
மாதரவர் பூவைமொழியுந்
தேசவொலி வீணையொடு கீதமது
வீதிநிறை தேவூரதுவே. 4

கானமுறு மான்மறியன் ஆனையுரி
போர்வைகன லாடல்புரிவோன்
ஏனஎயி றாமையிள நாகம்வளர்
மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ்
மாதவிப லாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள்
பாடிவரு தேவூரதுவே. 5

ஆறினொடு கீறுமதி யேறுசடை
யேறன்அடை யார்நகர்கள்தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த
நீறன்நமை யாளும்அரனூர்
வீறுமலர் ஊறுமது ஏறிவளர்
வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல்வி ளிப்பஇள
வாளைவரு தேவூரதுவே. 6

கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுரம்
அன்றவிய நின்றுநகைசெய்
என்றனது சென்றுநிலை யெந்தைதன
தந்தையமர் இன்பநகர்தான்
முன்றின்மிசை நின்றபல வின்கனிகள்
தின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி ஒன்றவிளை
யாடிவளர் தேவூரதுவே. 7

ஓதமலி கின்றதென் இலங்கையரை
யன்மலிபு யங்கள்நெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில
டர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கள்நட
மாடலொடு பொங்குமுரவஞ்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி
லாளர்புரி தேவூரதுவே. 8

வண்ணமுகி லன்னஎழில் அண்ணலொடு
சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள்
கண்ணவன் நலங்கொள்பதிதான்
வண்ணவன நுண்ணிடையின் எண்ணரிய
அன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகைசெ றிந்தஇசை
யாழ்மருவு தேவூரதுவே. 9

பொச்சமமர் பிச்சைபயில் அச்சமணு
மெச்சமறு போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு
நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்… … … … … ..
… … … … .. … … … …

( இச்செய்யுளின் மற்றையஅடிகள் சிதைந்துபோயின ) 10

துங்கமிகு பொங்கரவு தங்குசடை
நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு
பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி
ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை
வல்லவர்கள் சங்கையிலரே. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment