காடு கொண்டரங் பாடல் வரிகள் (katu kontaran) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவன்னியூர் – திருஅன்னியூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவன்னியூர் – திருஅன்னியூர்
சுவாமி : அக்கினிபுரீசுவரர்
அம்பாள் : பார்வதியார்
காடு கொண்டரங்
காடு கொண்டரங்
காக்கங்குல் வாய்க்கணம்
பாட மாநட
மாடும் பரமனார்
வாட மானிறங்
கொள்வர் மணங்கமழ்
மாட மாமதில்
சூழ்வன்னி யூரரே. 1
செங்கண் நாகம்
அரையது தீத்திரள்
அங்கை யேந்திநின்
றார்எரி யாடுவர்
கங்கை வார்சடை
மேலிடங் கொண்டவர்
மங்கை பாகம்வைத்
தார்வன்னி யூரரே. 2
ஞானங் காட்டுவர்
நன்னெறி காட்டுவர்
தானங் காட்டுவர்
தம்மடைந் தார்க்கெலாந்
தானங் காட்டித்தன்
றாளடைந் தார்கட்கு
வானங் காட்டுவர்
போல்வன்னி யூரரே. 3
இம்மை அம்மை
யெனவிரண் டும்மிவை
மெய்ம்மை தானறி
யாது விளம்புவர்
மெய்ம்மை யால்நினை
வார்கள்தம் வல்வினை
வம்மின் தீர்ப்பர்கண்
டீர்வன்னி யூரரே. 4
பிறைகொள் வாணுதற்
பெய்வளைத் தோளியர்
நிறையைக் கொள்பவர்
நீறணி மேனியர்
கறைகொள் கண்டத்தர்
வெண்மழு வாளினர்
மறைகொள் வாய்மொழி
யார்வன்னி யூரரே. 5
திளைக்கும் வண்டொடு
தேன்படு கொன்றையர்
துளைக்கை வேழத்தர்
தோலர் சுடர்மதி
முளைக்கு மூரற்
கதிர்கண்டு நாகம்நா
வளைக்கும் வார்சடை
யார்வன்னி யூரரே. 6
குணங்கொள் தோளெட்டு
மூர்த்தி இணையடி
இணங்கு வார்கட்
கினியனு மாய்நின்றான்
வணங்கி மாமலர்
கொண்டவர் வைகலும்
வணங்கு வார்மனத்
தார்வன்னி யூரரே. 7
இயலு மாலொடு
நான்முகன் செய்தவம்
முயலிற் காண்பரி
தாய்நின்ற மூர்த்திதான்
அயலெ லாம்அன்ன
மேயும்அந் தாமரை
வயலெ லாங்கயல்
பாய்வன்னி யூரரே. 8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று 9
நலங்கொள் பாகனை
நன்று முனிந்திடா
விலங்கல் கோத்தெடுத்
தானது மிக்கிட
இலங்கை மன்னன்
இருபது தோளினை
மலங்க வூன்றிவைத்
தார்வன்னி யூரரே.
திருச்சிற்றம்பலம்