Friday, January 16, 2026
HomeSivan Songsகருமணியைக் கனகத்தின் பாடல் வரிகள் | karumaniyaik kanakattin Thevaram song lyrics in tamil

கருமணியைக் கனகத்தின் பாடல் வரிகள் | karumaniyaik kanakattin Thevaram song lyrics in tamil

கருமணியைக் கனகத்தின் பாடல் வரிகள் (karumaniyaik kanakattin) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமுதுகுன்றம் – விருத்தாசலம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : நடுநாடு
தலம் : திருமுதுகுன்றம் – விருத்தாசலம்கருமணியைக் கனகத்தின்

கருமணியைக் கனகத்தின் குன்றொப் பானைக்
கருதுவார்க் காற்ற எளியான் றன்னைக்
குருமணியைக் கோளரவ மாட்டு வானைக்
கொல்வேங்கை யதளானைக்கோ வணவன் றன்னை
அருமணியை அடைந்தவர்கட் கமுதொப் பானை
ஆனஞ்சு மாடியைநான் அபயம் புக்க
திருமணியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 1

காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக்
காபாலி கட்டங்க மேந்தி னானைப்
பாரொளியை விண்ணொளியைப் பாதாளத் தானைப்
பான்மதியஞ் சூடியோர் பண்பன் றன்னைப்
பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் றன்னைப்
பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ்
சீரொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 2

எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை
ஏறூர்ந்த பெம்மானை யெம்மா னென்று
பத்தனாய்ப் பணிந்தடியேன் றன்னைப் பன்னாட்
பாமாலை பாடப் பயில்வித் தானை
முத்தினை யென்மணியை மாணிக் கத்தை
முளைத்தெழுந்த செம்பவளக் கொழுந்தொப் பானைச்
சித்தனையென் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 3

ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை
உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக்
கான்றிரிந்து காண்டீப மேந்தி னானைக்
கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத்
தான்றெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு
தன்னுடைய திருவடியென் றலைமேல் வைத்த
தீன்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 4

தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித்
தாமரையான் நான்முகனுந் தானே யாகி
மிக்கதொரு தீவளிநீர் ஆகா சமாய்
மேலுலகுக் கப்பாலாய் இப்பா லானை
அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க்
கங்கங்கே அறுசமய மாகி நின்ற
திக்கினையென் றிருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 5

புகழொளியைப் புரமெரித்த புனிதன் றன்னைப்
பொன்பொதிந்த மேனியனைப் புராணன் றன்னை
விழவொலியும் விண்ணொலியு மானான் றன்னை
வெண்காடு மேவிய விகிர்தன் றன்னைக்
கழலொலியுங் கைவளையு மார்ப்ப வார்ப்பக்
கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந்
திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 6

போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப்
புலியதளே உடையாகத் திரிவான் றன்னைக்
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றுங்
காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் றன்னை
மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்
வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்
தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 7

துறவாதே யாக்கை துறந்தான் றன்னைச்
சோதி முழுமுதலாய் நின்றான் றன்னைப்
பிறவாதே எவ்வுயிர்க்குந் தானே யாகிப்
பெண்ணினோ டாணுருவாய் நின்றான் றன்னை
மறவாதே தன்றிறமே வாழ்த்துந் தொண்டர்
மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 8

பொற்றூணைப் புலால்நாறு கபால மேந்திப்
புவலோக மெல்லா முழிதந் தானை
முற்றாத வெண்டிங்கட் கண்ணி யானை
முழுமுதலாய் மூவுலகும் முடிவொன் றில்லாக்
கற்றூணைக் காளத்தி மலையான் றன்னைக்
கருதாதார் புரமூன்று மெரிய அம்பாற்
செற்றானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 9

இகழ்ந்தானை இருபதுதோள் நெரிய வூன்றி
எழுநரம்பின் இசைபாட லினிது கேட்டுப்
புகழ்ந்தானைப் பூந்துருத்தி மேயான் றன்னைப்
புண்ணியனை விண்ணவர்கள் நிதியந் தன்னை
மகிழ்ந்தானை மலைமகளோர் பாகம் வைத்து
வளர்மதியஞ் சடைவைத்து மாலோர் பாகந்
திகழ்ந்தானைத் திருமுதுகுன் றுடையான் றன்னைத்
தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. 10

திருச்சிற்றம்பலம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments