கற்பொலிசு ரத்தினெரி பாடல் வரிகள் (karpolicu rattineri) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் வேதாரணியம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : வேதாரணியம்
சுவாமி : மறைக்காட்டு மணாளர்
அம்பாள் : யாழைப்பழித்த மொழியாள்

கற்பொலிசு ரத்தினெரி

கற்பொலிசு ரத்தினெரி கானினிடை
மாநடம தாடிமடவார்
இற்பலிகொ ளப்புகுதும் எந்தைபெரு
மானதிடம் என்பர்புவிமேல்
மற்பொலிக லிக்கடன்ம லைக்குவடெ
னத்திரைகொ ழித்தமணியை
விற்பொலிநு தற்கொடியி டைக்கணிகை
மார்கவரும் வேதவனமே. 1

பண்டிரைபௌ வப்புணரி யிற்கனக
மால்வரையை நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிட
முண்டகுழ கன்றனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின்
மீதணவு தென்றல்வெறியார்
வெண்டிரைகள் செம்பவளம் உந்துகடல்
வந்தமொழி வேதவனமே. 2

காரியன்மெல் லோதிநதி மாதைமுடி
வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பால்மகிழும் நம்பருறை
வென்பர்நெடு மாடமறுகில்
தேரியல் விழாவினொலி திண்பணில
மொண்படக நாளுமிசையால்
வேரிமலி வார்குழல்நன் மாதரிசை
பாடலொலி வேதவனமே. 3

நீறுதிரு மேனியின் மிசைத்தொளி
பெறத்தடவி வந்திடபமே
ஏறியுல கங்கடொறும் பிச்சைநுகர்
இச்சையர் இருந்தபதியாம்
ஊறுபொரு ளின்தமிழி யற்கிளவி
தேருமட மாதருடனார்
வேறுதிசை யாடவர்கள் கூறஇசை
தேருமெழில் வேதவனமே. 4

கத்திரிகை துத்திரிக றங்குதுடி
தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனையு லப்பில்கரு வித்திரள
லம்பஇமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு
வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கள்
மிடைந்துகளும் வேதவனமே. 5

மாலைமதி வாளரவு கொன்றைமலர்
துன்றுசடை நின்றுசுழலக்
காலையி லெழுந்தகதிர் தாரகைம
டங்கஅன லாடும்அரனூர்
சோலையின் மரங்கடொறும் மிண்டியின
வண்டுமது வுண்டிசைசெய
வேலையொலி சங்குதிரை வங்கசுற
வங்கொணரும் வேதவனமே. 6

வஞ்சக மனத்தவுணர் வல்லரணம்
அன்றவிய வார்சிலைவளைத்
தஞ்சக மவித்தஅம ரர்க்கமர
னாதிபெரு மானதிடமாங்
கிஞ்சுக விதழ்க்கனிகள் ஊறியசெவ்
வாயவர்கள் பாடல்பயில
விஞ்சக இயக்கர்முனி வக்கணம்
நிறைந்துமிடை வேதவனமே. 7

முடித்தலைகள் பத்துடை முருட்டுரு
வரக்கனை நெருக்கிவிரலால்
அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை
வைத்தவ னிடம்பலதுயர்
கெடுத்தலை நினைத்தற வியற்றுதல்
கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர்
மல்குபதி வேதவனமே. 8

வாசமலர் மேவியுறை வானும்நெடு
மாலுமறி யாதநெறியைக்
கூசுதல்செ யாதஅம ணாதரொடு
தேரர்குறு காதஅரனூர்
காசுமணி வார்கனகம் நீடுகட
லோடுதிரை வார்துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை
பேசுமெழில் வேதவனமே. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10

மந்தமுர வங்கடல் வளங்கெழுவு
காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவனம்
மேவுசிவன் இன்னருளினாற்
சந்தமிவை தண்டமிழின் இன்னிசை
யெனப்பரவு பாடலுலகிற்
பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில்
வார்களுயர் வானுலகமே.

வேதவனம் என்பது வேதாரணியம்.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment