காரார் கொன்றை கலந்த பாடல் வரிகள் (karar konrai kalanta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பாற்றுறை – திருப்பாலத்துறை தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பாற்றுறை – திருப்பாலத்துறை
சுவாமி : ஆதிமூலேசுவரர்
அம்பாள் : மேகலாம்பிகை

காரார் கொன்றை கலந்த

காரார் கொன்றை கலந்த முடியினர்
சீரார் சிந்தை செலச்செய்தார்
பாரார் நாளும் பரவிய பாற்றுறை
ஆரா ராதி முதல்வரே. 1

நல்லா ரும்மவர் தீய ரெனப்படும்
சொல்லார் நன்மலர் சூடினார்
பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை
எல்லா ருந்தொழும் ஈசரே. 2

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
எண்ணார் வந்தென் எழில்கொண்டார்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை
உண்ணா ணாளும் உறைவரே. 3

பூவுந் திங்கள் புனைந்த முடியினர்
ஏவின் அல்லா ரெயிலெய்தார்
பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை
ஓவென் சிந்தை யொருவரே. 4

மாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தென
தாகம் பொன்னிற மாக்கினார்
பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை
நாகம் பூண்ட நயவரே. 5

போது பொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலங்கொண்டார்
பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை
வேத மோதும் விகிர்தரே. 6

வாடல் வெண்டலை சூடினர் மால்விடை
கோடல் செய்த குறிப்பினார்
பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை
ஆடல் நாகம் அசைத்தாரே. 7

வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர்
எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார்
பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை
மவ்வல் சூடிய மைந்தரே. 8

ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி
ஆன வண்ணத்தெம் அண்ணலார்
பான லம்மலர் விம்மிய பாற்றுறை
வான வெண்பிறை மைந்தரே. 9

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர்
வந்தென் நன்னலம் வௌவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே. 10

பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப்
பத்தன் ஞானசம் பந்தன தின்தமிழ்
பத்தும் பாடிப் பரவுமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment