கறையணி வேலிலர் பாடல் வரிகள் (karaiyani velilar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பிரமபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பிரமபுரம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

கறையணி வேலிலர்

கறையணி வேலிலர் போலும்
கபாலந் தரித்திலர் போலும்
மறையும் நவின்றிலர் போலும்
மாசுணம் ஆர்த்திலர் போலும்
பறையுங் கரத்திலர் போலும்
பாசம் பிடித்திலர் போலும்
பிறையுஞ் சடைக்கிலர் போலும்
பிரம புரம்அமர்ந் தாரே. 1

கூரம் பதுவிலர் போலுங்
கொக்கின் இறகிலர் போலும்
ஆரமும் பூண்டிலர் போலும்
ஆமை அணிந்திலர் போலும்
தாருஞ் சடைக்கிலர் போலும்
சண்டிக் கருளிலர் போலும்
பேரும் பலவிலர் போலும்
பிரம புரம்அமர்ந் தாரே. 2

சித்த வடிவிலர் போலுந்
தேசந் திரிந்திலர் போலும்
கத்தி வருங்கடுங் காளி கதங்கள்
தவிர்த்திலர் போலும்
மெய்த்த நயனம் இடந்தார்க் காழி
யளித்திலர் போலும்
பித்த வடிவிலர் போலும் பிரம
புரம்அமர்ந் தாரே. 3

நச்சர வாட்டிலர் போலும் நஞ்ச
மிடற்றிலர் போலும்
கச்சுத் தரித்திலர் போலும் கங்கை
தரித்திலர் போலும்
மொய்ச்சவன் பேயிலர் போலும் முப்புரம்
எய்திலர் போலும்
பிச்சை இரந்திலர் போலும் பிரம
புரம்அமர்ந் தாரே. 4

தோடு செவிக்கிலர் போலும்
சூலம் பிடித்திலர் போலும்
ஆடு தடக்கை வலிய
ஆனை உரித்திலர் போலும்
ஓடு கரத்திலர் போலும்
ஒள்ளழல் கையிலர் போலும்
பீடு மிகுத்தெழு செல்வப் பிரம
புரம்அமர்ந் தாரே. 5

விண்ணவர் கண்டிலர் போலும்
வேள்வி யழித்திலர் போலும்
அண்ணல் அயன்தலை வீழ அன்று
மறுத்திலர் போலும்
வண்ண எலும்பினோ டக்கு வடங்கள்
தரித்திலர் போலும்
பெண்ணினம் மொய்த்தெழு செல்வப் பிரம
புரம்அமர்ந் தாரே. 6

பன்றியின் கொம்பிலர் போலும்
பார்த்தற் கருளிலர் போலும்
கன்றிய காலனை வீழக் கால்கொடு
பாய்ந்திலர் போலும்
துன்று பிணஞ்சுடு காட்டில் ஆடித்
துதைந்திலர் போலும்
பின்றியும் பீடும் பெருகும் பிரம
புரம்அமர்ந் தாரே. 7

பரசு தரித்திலர் போலும்
படுதலை பூண்டிலர் போலும்
அரசன் இலங்கையர் கோனை அன்றும்
அடர்த்திலர் போலும்
புரைசெய் புனத்திள மானும் புலியின்
அதளிலர் போலும்
பிரச மலர்ப்பொழில் சூழ்ந்த பிரம
புரம்அமர்ந் தாரே. 8

அடிமுடி மாலயன் தேட
அன்றும் அளப்பிலர் போலும்
கடிமலர் ஐங்கணை வேளைக் கனல
விழித்திலர் போலும்
படிமலர்ப் பாலனுக் காகப் பாற்கடல்
ஈந்திலர் போலும்
பிடிநடை மாதர் பெருகும் பிரம
புரம்அமர்ந் தாரே. 9

வெற்றரைச் சீவரத் தார்க்கு வெளிப்பட
நின்றிலர் போலும்
அற்றவர் ஆழ்நிழல் நால்வர்க் கறங்கள்
உரைத்திலர் போலும்
உற்றவ ரொன்றிலர் போலும் ஓடு
முடிக்கிலர்போலும்
பெற்றமும் ஊர்ந்திலர் போலும் பிரம
புரம்அமர்ந் தாரே. 10

பெண்ணுரு ஆணுரு அல்லாப் பிரம
புரநகர் மேய
அண்ணல்செய் யாதன வெல்லாம் அறிந்து
வகைவகை யாலே
நண்ணிய ஞானசம் பந்தன் நவின்றன
பத்தும் வல்லார்கள்
விண்ணவ ரோடினி தாக வீற்றிருப்
பாரவர் தாமே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment