கரைந்து கைதொழு பாடல் வரிகள் (karaintu kaitolu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவீழிமிழலை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவீழிமிழலை
சுவாமி : வீழியழகர்
அம்பாள் : அழகுமுலையம்மை

கரைந்து கைதொழு

கரைந்து கைதொழு
வாரையுங் காதலன்
வரைந்து வைதெழு
வாரையும் வாடலன்
நிரந்த பாரிடத்
தோடவர் நித்தலும்
விரைந்து போவது
வீழி மிழலைக்கே. 1

ஏற்று வெல்கொடி
ஈசன்ற னாதிரை
நாற்றஞ் சூடுவர்
நன்னறுந் திங்களார்
நீற்றுச் சந்தன
வெள்ளை விரவலார்
வேற்றுக் கோலங்கொள்
வீழி மிழலையே. 2

புனைபொற் சூலத்தன்
போர்விடை யூர்தியான்
வினைவெல் நாகத்தன்
வெண்மழு வாளினான்
நினைய நின்றவன்
ஈசனை யேயெனா
வினையி லார்தொழும்
வீழி மிழலையே. 3

மாடத் தாடு
மனத்துடன் வைத்தவர்
கோடத் தார்குருக்
கேத்திரத் தார்பலர்
பாடத் தார்பழிப்
பார்பழிப் பல்லதோர்
வேடத் தார்தொழும்
வீழி மிழலையே. 4

எடுத்த வெல்கொடி
யேறுடை யான்றமர்
உடுப்பர் கோவண
முண்பது பிச்சையே
கெடுப்ப தாவது
கீழ்நின்ற வல்வினை
விடுத்துப் போவது
வீழி மிழலைக்கே. 5

குழலை யாழ்மொழி
யாரிசை வேட்கையால்
உழலை யாக்கையை
யூணும் உணர்விலீர்
தழலை நீர்மடிக்
கொள்ளன்மின் சாற்றினோம்
மிழலை யானடி
சாரவிண் ணாள்வரே. 6

தீரன் தீத்திர
ளன்சடைத் தங்கிய
நீரன் ஆடிய
நீற்றன்வண் டார்கொன்றைத்
தாரன் மாலையன்
றண்ணறுங் கண்ணியன்
வீரன் வீழி
மிழலை விகிர்தனே. 7

எரியி னாரிறை
யாரிடு காட்டிடை
நரியி னார்பரி
யாமகிழ் கின்றதோர்
பெரிய னார்தம்
பிறப்பொடு சாதலை
விரியி னார்தொழும்
வீழி மிழலையே. 8

நீண்ட சூழ்சடை
மேலொர் நிலாமதி
காண்டு சேவடி
மேலொர் கனைகழல்
வேண்டு வாரவர்
வீதி புகுந்திலர்
மீண்டும் போவது
வீழி மிழலைக்கே. 9

பாலை யாழொடு
செவ்வழி பண்கொள
மாலை வானவர்
வந்து வழிபடும்
ஆலை யாரழல்
அந்தண ராகுதி
வேலை யார்தொழும்
வீழி மிழலையே. 10

மழலை யேற்று
மணாளன் திருமலை
சுழல ஆர்த்தெடுத்
தான்முடி தோளிறக்
கழல்கொள் காலிற்
றிருவிர லூன்றலும்
மிழலை யானடி
வாழ்கென விட்டதே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment