காரைகள் கூகைமுல்லை பாடல் வரிகள் (karaikal kukaimullai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநனிபள்ளி – புஞ்சை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநனிபள்ளி – புஞ்சை
சுவாமி : நற்றுணையப்பர்
அம்பாள் : மலையான் மடந்தை

காரைகள் கூகைமுல்லை

காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை
படர்தொடரி கள்ளி கவினிச்
சூரைகள் பம்மிவிம்மு சுடுகாட மர்ந்த
சிவன்மேய சோலை நகர்தான்
தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை
குதிகொள்ள வள்ளை துவள
நாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும்
நனிபள்ளி போலும் நமர்காள். 1

சடையிடை புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம்
வளர்திங்கள் கண்ணி அயலே
இடையிடை வைத்ததொக்கும் மலர்தொத்து மாலை
யிறைவன் னிடங்கொள் பதிதான்
மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து
மணநாறு நீலம் மலரும்
நடையுடை யன்னம்வைகு புனலம்ப டப்பை
நனிபள்ளி போலும் நமர்காள். 2

பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல்
ஒழிபாடி லாத பெருமான்
கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை
யிடமாய காதல் நகர்தான்
வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின்
விடுபோ தலர்ந்த விரைசூழ்
நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு
நனிபள்ளி போலும் நமர்காள் 3

குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு
தலைமாலை யோடு குலவி
ஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக
வுடையா னுகந்த நகர்தான்
குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட
பெடைவண்டு தானும் முரல
நளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு
நனிபள்ளி போலும் நமர்காள். 4

தோடொரு காதனாகி யொருகா திலங்கு
சுரிசங்கு நின்று புரளக்
காடிட மாகநின்று கனலாடும் எந்தை
யிடமாய காதல் நகர்தான்
வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று
வெறிநீர் தெளிப்ப விரலால்
நாடுடனாடு செம்மை யொலிவெள்ள மாரு
நனிபள்ளி போலும் நமர்காள். 5

மேகமொ டோடுதிங்கள் மலரா அணிந்து
மலையான் மடந்தை மணிபொன்
ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை
பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொ டாடுமந்தி யுகளுஞ் சிலம்ப
அகிலுந்தி யொண்பொன் இடறி
நாகமொ டாரம்வாரு புனல்வந்த லைக்கும்
நனிபள்ளி போலும் நமர்காள். 6

தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங்
கொடுகொட்டி வீணை முரல
வகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த
பெருமான் உகந்த நகர்தான்
புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல்
பணிவார்கள் பாடல் பெருகி
நகைமலி முத்திலங்கு மணல் சூழ் கிடக்கை
நனிபள்ளி போலும் நமர்காள். 7

வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று
மதியா அரக்கன் வலியோ
டுலமிகு தோள்கள்ஒல்க விரலால டர்த்த
பெருமான் உகந்த நகர்தான்
நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை
யெனநின்ற நீதி யதனை
நலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
நனிபள்ளி போலும் நமர்காள். 8

நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற
தொருநீர்மை சீர்மை நினையார்
அறவுரு வேதநாவன் அயனோடு மாலும்
அறியாத அண்ணல் நகர்தான்
புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை
புனைகொன்றை துன்று பொதுளி
நறவிரி போதுதாது புதுவாசம் நாறும்
நனிபள்ளி போலும் நமர்காள். 9

அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில்
இடவுண்டு பட்ட அமணும்
மனமிகு கஞ்சிமண்டை யதிலுண்டு தொண்டர்
குணமின்றி நின்ற வடிவும்
வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின்
விடையா னுகந்த நகர்தான்
நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும்
நனிபள்ளி போலும் நமர்காள். 10

கடல்வரை யோதம்மல்கு கழிகானல் பானல்
கமழ்காழி யென்று கருதப்
படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த
பதியான ஞான முனிவன்
இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி
னிசையா லுரைத்த பனுவல்
நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க
வினைகெடுதல் ஆணை நமதே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment