காண்டலேகருத் தாய்நினைந்திருந் பாடல் வரிகள் (kantalekarut tayninaintirun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்
சுவாமி : புற்றிடங்கொண்டார்
அம்பாள் : அல்லியம்பூங்கோதை

காண்டலேகருத் தாய்நினைந்திருந்

காண்டலேகருத் தாய்நினைந்திருந்
தேன்மனம்புகுந் தாய்கழலடி
பூண்டுகொண் டொழிந்தேன்
புறம்போயி னாலறையோ
ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை
மேலெழுகொடி வானிளம்மதி
தீண்டிவந் துலவுந்
திருவாரூ ரம்மானே. 1

கடம்படந்நட மாடினாய்களை
கண்ணெனக்கொரு காதல்செய்தடி
ஒடுங்கி வந்தடைந்
தேனொழிப்பாய் பிழைப்பவெல்லாம்
முடங்கிறால்முது நீர்மலங்கிள
வாளைசெங்கயல் சேல்வரால்களி
றடைந்த தண்கழனி
அணியாரூ ரம்மானே. 2

அருமணித்தடம் பூண்முலை
அரம்பையரொ டருளிப்பாடியர்
உரிமையிற் றொழுவார்
உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர்
சைவர்பாசுப தர்கபாலிகள்
தெருவினிற் பொலியுந்
திருவாரூ ரம்மானே. 3

பூங்கழல்தொழு தும்பரவியும்
புண்ணியாபுனி தாவுன்பொற்கழல்
ஈங்கிருக்கப் பெற்றேன்
என்னகுறை யுடையேன்
ஓங்குதெங்கிலை யார்கமுகிள
வாழைமாவொடு மாதுளம்பல
தீங்கனி சிதறுந்
திருவாரூ ரம்மானே. 4

நீறுசேர்செழு மார்பினாய்நிரம்
பாமதியொடு நீள்சடையிடை
ஆறுபாய வைத்தாய்
அடியே அடைந்தொழிந்தேன்
ஏறிவண்டொடு தும்பியஞ்சிற
கூன்றவிண்ட மலரிதழ்வழி
தேறல்பாய்ந் தொழுகுந்
திருவாரூ ரம்மானே. 5

அளித்துவந்தடி கைதொழுமவர்
மேல்வினைகெடு மென்றிவையகங்
களித்துவந் துடனே
கலந்தாடக் காதலராய்க்
குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந்
தாடுகோதையர் குஞ்சியுள்புகத்
தெளிக்குந் தீர்த்தமறாத்
திருவாரூ ரம்மானே. 6

திரியுமூவெயில் தீயெழச்சிலை
வாங்கிநின்றவ னேயென்சிந்தையுட்
பிரியுமா றெங்ஙனே
பிழைத்தேயும் போகலொட்டேன்
பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த
சாலிதிப்பிய மென்றிவையகத்
தரியுந் தண்கழனி
யணியாரூ ரம்மானே. 7

பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட
வாய்ந்தசைந்துட லம்புகுந்துநின்
றிறக்குமா றுளதே
இழித்தேன் பிறப்பினைநான்
அறத்தையேபுரிந் தமனத்தனாய்
ஆர்வச்செற்றக்கு ரோதநீக்கியுன்
திறத்தனாய் ஒழிந்தேன்
திருவாரூ ரம்மானே. 8

முளைத்தவெண்பிறை மொய்சடையுடை
யாயெப்போதுமென் னெஞ்சிடங்கொள்ள
வளைத்துக் கொண்டிருந்தேன்
வலிசெய்து போகலொட்டேன்
அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு
தந்தகாலமுங் கண்டுதன்பெடை
திளைக்குந் தண்கழனித்
திருவாரூ ரம்மானே. 9

நாடினார்கம லம்மலரய
னோடிரணியன் ஆகங்கீண்டவன்
நாடிக் காணமாட்டாத்
தழலாய நம்பானைப்
பாடுவார்பணி வார்பல்லாண்டிசை
கூறுபத்தர்கள் சித்தத்துள்புக்குத்
தேடிக் கண்டுகொண்டேன்
திருவாரூ ரம்மானே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment