கண்டலஞ்சேர் நெற்றியிளங் பாடல் வரிகள் (kantalancer nerriyilan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கோடிகா – திருக்கோடிக்காவல் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கோடிகா – திருக்கோடிக்காவல்கண்டலஞ்சேர் நெற்றியிளங்

கண்டலஞ்சேர் நெற்றியிளங் காளை கண்டாய்
கன்மதில்சூழ் கந்தமா தனத்தான் கண்டாய்
மண்டலஞ்சேர் மயக்கறுக்கும் மருந்து கண்டாய்
மதிற்கச்சி யேகம்ப மேயான் கண்டாய்
விண்டலஞ்சேர் விளக்கொளியாய் நின்றான் கண்டாய்
மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டலஞ்சேர் கண்டத்தெங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 1

வண்டாடு பூங்குழலாள் பாகன் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் கண்டாய்
பண்டாடு பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்
பரலோக நெறிகாட்டும் பரமன் கண்டாய்
செண்டாடி அவுணர்புரஞ் செற்றான் கண்டாய்
திருவாரூர்த் திருமூலத் தானன் கண்டாய்
கொண்டாடு மடியவர்தம் மனத்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 2

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மலையார்ந்த மடமங்கை பங்கன் கண்டாய்
வானோர்கள் முடிக்கணியாய் நின்றான் கண்டாய்
இலையார்ந்த திரிசூலப் படையான் கண்டாய்
ஏழுலகு மாய்நின்ற எந்தை கண்டாய்
கொலையார்ந்த குஞ்சரத்தோல் போர்த்தான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 3

மற்றாருந் தன்னொப்பா ரில்லான் கண்டாய்
மயிலாடு துறையிடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்றா டரவணிந்த புனிதன் கண்டாய்
பூந்துருத்திப் பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட் கற்றானாய் நின்றான் கண்டாய்
ஐயா றகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 4

வாரார்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போரார்ந்த மால்விடையொன் றூர்வான் கண்டாய்
புகலூரை யகலாத புனிதன் கண்டாய்
நீரார்ந்த நிமிர்சடையொன் றுடையான் கண்டாய்
நினைப்பார்தம் வினைப்பாரம் இழிப்பான் கண்டாய்
கூரார்ந்த மூவிலைவேற் படையான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 5

கடிமலிந்த மலர்க்கொன்றைச் சடையான் கண்டாய்
கண்ணப்ப விண்ணப்புக் கொடுத்தான் கண்டாய்
படிமலிந்த பல்பிறவி யறுப்பான் கண்டாய்
பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடிமலிந்த சிலம்பலம்பத் திரிவான் கண்டாய்
அமரர்கணந் தொழுதேத்தும் அம்மான் கண்டாய்
கொடிமலிந்த மதில்தில்லைக் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 6

உழையாடு கரதலமொன் றுடையான் கண்டாய்
ஒற்றியூ ரொற்றியா வுடையான் கண்டாய்
கழையாடு கழுக்குன்ற மமர்ந்தான் கண்டாய்
காளத்திக் கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழையாடு மெண்புயத்த இறைவன் கண்டாய்
என்னெஞ்சத் துள்நீங்கா எம்மான் கண்டாய்
குழையாட நடமாடுங் கூத்தன் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 7

படமாடு பன்னகக்கச் சசைத்தான் கண்டாய்
பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடமாடி ஏழுலகுந் திரிவான் கண்டாய்
நான்மறையின் பொருள்கண்டாய் நாதன் கண்டாய்
கடமாடு களிறுரித்த கண்டன் கண்டாய்
கயிலாயம் மேவி யிருந்தான் கண்டாய்
குடமாடி யிடமாகக் கொண்டான் கண்டாய்
கோடிகா அமர்ந்துறையுங் குழகன் றானே. 8

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 9

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment