கண்காட்டு நுதலானுங் பாடல் வரிகள் (kankattu nutalanun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவெண்காடு தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவெண்காடு
சுவாமி : திருவெண்காட்டீசர்
அம்பாள் : பிரமவித்யாநாயகி

கண்காட்டு நுதலானுங்

கண்காட்டு நுதலானுங்
கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும்
பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும்
பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும்
விடைகாட்டுங் கொடியானே. 1

பேயடையா பிரிவெய்தும்
பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர்
ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன்
வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத்
தோயாவாந் தீவினையே. 2

மண்ணொடுநீ ரனல்காலோ
டாகாயம் மதிஇரவி
எண்ணில்வரு மியமானன்
இகபரமு மெண்டிசையும்
பெண்ணினொடாண் பெருமையொடு
சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண்
காடிடமா விரும்பினனே. 3

விடமுண்ட மிடற்றண்ணல்
வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை
மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை
தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த
நகைகாட்டுங் காட்சியதே. 4

வேலைமலி தண்கானல்
வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால்
வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர்
விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற் றான்அடியார்
என்றடர அஞ்சுவரே. 5

தண்மதியும் வெய்யரவுந்
தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர்
கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம்
பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல்
வீற்றிருக்கும் வெண்காடே. 6

சக்கரமாற் கீந்தானுஞ்
சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும்
அடைந்தயிரா வதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும்
வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம்நன் குடையானும்
முக்கணுடை இறையவனே. 7

பண்மொய்த்த இன்மொழியாள்
பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன்
றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை
நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண்
டிசைமுரலும் வெண்காடே. 8

கள்ளார்செங் கமலத்தான்
கடல்கிடந்தான் எனஇவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி
உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும்
மேதகுவெண் காட்டானென்(று)
உள்ளாடி உருகாதார்
உணர்வுடைமை உணரோமே. 9

போதியர்கள் பிண்டியர்கள்
மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்கள் அவர்பிறிமின்
அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர்
வியன்திருவெண் காட்டானென்
றோதியவர் யாதுமொரு
தீதிலரென் றுணருமினே. 10

தண்பொழில்சூழ் சண்பையர்கோன்
தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி
விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை
பாடியபத் திவைவல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய்
வான்பொலியப் புகுவாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment