Kandapathu lyrics in tamil
கண்டபத்து பதிகம் (Kandapathu lyrics)
இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்
சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே. 1
வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத்
தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை
எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை
அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே. 2
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக்
கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை
அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே. 3
கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை
வல்லாள னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம்
பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை
எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே. 4
சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு
பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக்
கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே. 5
பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும்
உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச்
செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி
மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே. 6
பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப்
பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே
சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த
வித்தகனார் விளையாடல் விளங்குதில்லை கண்டேனே. 7
அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி
விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு
அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக்
களவிலா வானவருந் தொழுதில்லை கண்டேனே. 8
பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை
ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி
வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை
நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே. 9
பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே. 10
அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை
சிறப்பு: நிருத்த தரிசனம்;தரவு கொச்சகக் கலிப்பா.
திருச்சிற்றம்பலம்